மும்பை: டி20 ஓவர் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டு வீராங்கனை ஹேமலதா அறிவித்துள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் 9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில், ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், எஸ்.சஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உமா சவுத்ரி, தனுஜா கன்வர், சைமா தாக்குர் ஆகியோர் ரிசர்வ் வீராங்கனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஹேமலதாவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
டி20 ஓவர் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக (தலா 5 அணிகள்) பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி-யில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளில் விளையாடும். குரூப் ஆட்டங்களில் டாப் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அக்டோபர் 4-ம் தேதி நியூஸிலாந்து அணியுடன் இந்தியா விளையாடுகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் (அக்டோபர் 6), இலங்கை (அக்டோபர் 9), ஆஸ்திரேலியா (அக்டோபர் 13) ஆகிய அணிகளுடன் இந்தியா விளையாடுகிறது.