பிசினஸில் ஒருவர் வெற்றிகரமாக மாறுவதற்கு தேவையானவை எதுவாக இருக்கும், மிகச்சரியான முதலீட்டுடன், தனித்துவமான ஒரு யோசனை ஆகிய இரண்டும்தானே வேண்டும். போட்டிகள் நிறைந்து கிடக்கும் இன்றைய நவீன உலகில் தனக்கென தனித்துவமான தொழில்களை தெரிவு செய்வதில் இக்கால பெண்கள் முன்னணியில் இருக்கின்றனர். அந்தவகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் போட்டோ, பெயர் பதித்து என்கிரேவிங் (செதுக்குதல்) செய்து தருகிறார் பெண் தொழில் முனைவோர் ராணி அருண். மேலும் பல்வேறு ஆன்லைன் விற்பனையிலும் கலக்கி வருகிறார். புதுமையான இந்த தொழிலின் சவால்கள் என்னென்ன? இதனை எப்படி செய்யலாம் என அவரிடம் கேட்டபோது.
சொந்தத் தொழில் செய்யும் எண்ணங்கள் தோன்றியது ஏன்?
தற்போது சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையில் ஏராளமானோர் புதிய பல தொழில்களை ஆரம்பித்துக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் தானே தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிகளவில் பணம் தேவைப்படுகிற பிசினஸ் ஐடியா இருந்தாலும் அதற்கு தகுந்த முதலீடு இல்லாத காரணத்தால் அந்த தொழிலை துவங்க முடியாத நிலையில் பலர் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் சுமாரான முதலீடு வைத்துக் கொண்டு என்ன மாதிரியான தொழில் துவங்கலாம் என்பதுபற்றி யோசித்தப்போது தோன்றியதுதான் இந்த என்கிரேவிங் செய்யும் தொழில். இதற்கு போட்டி அதிகம் இல்லை என்பதாலும், வித்தியாசமான முயற்சி என்பதாலும் தான் இதில் இறங்கினேன். தற்போது இதற்கு கிடைக்கும் வரவேற்பில் இத்தொழிலை மிகச்சிறப்பான முறையில் செய்தும் வருகிறேன்.
என்கிரேவிங் செய்வதற்கு என்னென்ன தேவை?
இதற்கு முந்தைய காலகட்டத்தில் பாத்திரக்கடைகளில், பாத்திரத்தில் பெயர் பொறித்து தருவது என்பது பழைய நடைமுறைதான். அதையே கொஞ்சம் நவீனப் படுத்தி பெயருடன் புகைப்படம், நிறுவனப் பெயர்கள் என பொறித்து தருகிறோம். இதற்கென வெளிநாட்டில் இருந்து மிஷினை வரவழைத்தோம். இதன் மூலமாக எவர்சில்வர் பீங்கான் போன்ற பொருட்களில் பெயர், போட்டோ மற்றும் கம்பெனி லோகோக்களை லேசர் மூலமாக பொறித்துத்தருகிறோம். இந்த மிஷின் அளவில் பெரியது தான். இதனை வைக்கவே தனி இடம் தேவைப்படுகிறது. இது ஒரு மல்டி பர்பஸ் மிஷின், இதன் மூலம் பீங்கான் பொருட்களிலும் கூட பெயர் பொறிக்க இயலும். கொஞ்சம் கணிசமான விலையானாலும் ஒரு முறை முதலீடுசெய்து வாங்கினால் போதும் தொடர்ந்து நல்ல லாபத்தை தருகிறது. இது ஒரு அதிக போட்டிகளற்ற நல்ல தொழில்.
இதற்கான வரவேற்பு எப்படி உள்ளது?
முதலில் குழந்தைகளுக்கான பொருட்கள் பள்ளியில் தொலையாமல் மாறி விடாமல் இருக்க இந்த புகைப்படத்துடன் கூடிய என்கிரேவிங் முறை வசதியாக உள்ளது. குழந்தைகள் அன்றாடம் எடுத்து போகும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், தட்டுகள், ஸ்பூன், போன்றவற்றில் தான் ஆரம்பத்தில் பெயர் பொறித்து தந்துகொண்டிருந்தேன். அது பள்ளியில் பயிலும் அந்த குழந்தைகளுக்கு மிகுந்த உபயோகமாக இருந்ததால் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் நண்பர்களின் குழந்தைகளுக்கும் பரிசாக வாங்கித் தர ஆரம்பித்தார்கள். இப்படியான நேரடியான விளம்பரத்தால் நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கியது. தற்போது ரிட்டன் கிப்ட்கள், கல்யாணம் போன்ற விழாக்களில் பரிசுப் பொருட்கள், நிறுவன லோகோக்கள் பொறித்த மொத்த ஆர்டர்கள் என நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. இதன் மூலமாக நிறைய ஆன்லைன் ஆர்டர்களும் வரத் துவங்கியது. வித்தியாசமான நல்ல தொழில் நேர்த்திகளுக்கு வாடிக்கையாளர்கள் எப்போதுமே பெருமளவில் வரவேற்பினையே அளிக்கிறார்கள்.
இத்தொழிலில் வருமான வாய்ப்புகள் எப்படி?
மிஷினுக்கான முதலீடு முதல் முறை மட்டுமே. லேசர் பிரிண்டிங்கான மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். ஆனாலும் பிரிண்டிங் வருமானத்தோடு கணக்கெடுப்பின் மொத்த ஆர்டர்கள் மட்டுமே அதிக லாபம் தரக்கூடியவை எனலாம். சிறிய ஆர்டர்கள் குறைந்த லாபத்தை கொடுக்கும். மொத்த ஆர்டர்களுக்கு மொத்தமாக ஹோல்சேலில் பாத்திரங்கள் வாங்குவதன் மூலமும் வருமான வாய்ப்பு கிடைக்கும். இத்தொழிலை முழு நேரமாக செய்வது முக்கியம். கல்யாண ஆர்டர்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். மொத்தத்தில் ஆர்வத்தோடு அக்கறையாய் செய்தால் எத்தொழிலிலும் கணிசமான வருமானம் பார்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பான நல்ல வருமானம் பெறக்கூடிய தொழில் இது என்பேன்.
இதற்கான ஆர்டர்கள் உங்களுக்கு கிடைப்பது எப்படி?
நிறைய ஐடி கம்பெனிகள் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கும் கார்பரேட் அன்பளிப்புகள் உதாரணமாக காபி கப்கள் போன்ற பொருட்களில் கம்பெனி லோகோக்கள் மற்றும் நிறுவன பெயர்களை பொறித்து தர கேட்கிறது. அதேபோன்று பர்த்டே பார்ட்டிகள் திருமண சீமந்தம் போன்ற ரிட்டன் கிப்ட் வகை ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். நிறைய ஸ்கூல் ஆர்டர்களும் வருகிறது. பொதுவாக தங்கள் புகைப்படம் பெயர் பொறித்த பொருட்களை குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். ஆன்லைன் ஆர்டர்களும் தற்போது நல்ல வருமானத்தை தருகிறது. பரிசுப் பொருட்கள் கடையிலும் ஆர்டர்கள் பிடிக்கலாம். தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் தங்களுக்கேயான தனித்துவமான பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள்.
உங்களைப் பற்றி மற்றும் உங்களுக்கு கிடைத்த விருதுகள் குறித்தும் சொல்லுங்கள்…
எனது சொந்த ஊர். உடுமலைப்பேட்டை. நான் எம்.பி.ஏ பட்டதாரி. எனது கணவரும் எம். பி. ஏ தான் . அவரும் சொந்த வியாபாரம் செய்துவருகிறார். நான் முதலில் இருந்தே ஆன்லைனில் பிஸினஸ் செய்து வந்தேன். நான் ஆன்லைனில் செட்டிநாடு காட்டன் புடவைகள், ஆர்டிபிஸியல் ஜூவல்லரிகள், சுடிதார் குர்தி வகைகள், பேக் போன்றவற்றை விற்பனை செய்து வந்தேன். அதன் அதற்கடுத்த கட்டமாக ஆரம்பித்ததுதான் இந்த என்கிரேவிங் தொழில். சிறந்த பெண் தொழில் முனைவோர் மற்றும் சிறந்த ஆன்லைன் விற்பனையாளர் என்பதற்காக விமன்ஸ் லீடர்ஷிப் அவார்ட் பெற்றிருக்கிறேன்.
உங்களைப் போன்ற பெண் தொழில்முனைவோருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
நான் முதலில் சொற்ப சம்பளத்தில்தான் வேலை பார்த்தேன். நான் வேலையை விட்டுவிட்டு சுய தொழில் துவங்க நிறைய பேர் ஆதரவும் எதிர்ப்பும் என குழப்பினார்கள் தான். ஆனால் நானும் எனது கணவரும் சுய தொழில் குறித்து உறுதியாக இருந்தோம்.. ஜெயித்தோம்… கொஞ்சம் முதலீடு கொஞ்சம் இடமும் நிறைய ஆர்வமும் விடாமுயற்சியுடன் உழைத்தால் சுயதொழில் மூலம் கணிசமாக சம்பாதித்து கௌரவமாக வாழலாம். இத்தொழில் ஆண்கள் பெண்கள் என அனைவருக்குமே ஏற்றது. நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லாத பாதுகாப்பான தொழில். உங்கள் நேரத்தை மட்டும் உழைப்புடன் தொடர்ந்தால் வெற்றி நம் வசம் என தன்னம்பிக்கை மிளிர சொல்கிறார் பெண் தொழில் முனைவோர் ராணி அருண்.
– தனுஜா ஜெயராமன்