Monday, June 16, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு பெண்களைப் பாதிக்கும் சிறுநீர்த் தொற்று காரணமும் தீர்வும்!

பெண்களைப் பாதிக்கும் சிறுநீர்த் தொற்று காரணமும் தீர்வும்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக மாதவிடாய் நின்ற பெண்களுக்குப் புற்றுநோய் மற்றும் எலும்புத் தேய்மான நோய் வரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், இவர்களுக்கு ஏற்படும்
முக்கியமான பிரச்னைகளில் ஒன்று சிறுநீர்த் தொற்று. குறிப்பாகச் சர்க்கரை நோயாளிகள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், சிறுநீர் வடிகுழாய் பொருத்தியவர்கள், சிறுநீர் அடங்காமை பாதிப்புள்ளவர்கள், மலச்சிக்கலால் தவிப்பவர்கள், கர்ப்பப்பை அடி இறங்கியவர்கள், சிறுநீர்ப் பாதையில் கல் அல்லது கட்டி ஏற்பட்டு அடைப்புப் பாதிப்பில் இருப்பவர்கள், புற்றுநோய் தாக்கியவர்கள் ஆகியோருக்கு இது மீண்டும் மீண்டும் வரும் அபாயம் அதிகம். இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு மிகவும் குறைவதால், இந்தத் தொற்று வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இது ஏற்படலாம்.

எதனால் சிறுநீர்த்தொற்று ஏற்படுகிறது.பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்க் கிருமி சிறுநீர்த் தாரையைத் தாக்குவதால் சிறுநீர்த்தொற்று ஏற்படுகிறது. பிறப்புறுப்புகளைச் சுத்தம் செய்யும்போது அசுத்தமான நீரில் உள்ள பாக்டீரியா சிறுநீர்த் தாரையைச் சென்றடைந்ததும் தொற்று ஏற்படலாம். பெருங்குடலின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் உள்ள பாக்டீரியா சிறுநீர்த் தாரையில் சென்றதும் நோய்த்தொற்று ஏற்படலாம்.உடலில் வேறு ஏதேனும் உறுப்புகளில் நோய்த்தொற்று இருந்து, அங்கிருந்து கிருமிகள் ரத்தத்தில் கலந்து சிறுநீர்ப் பாதையைப் பாதிக்கும் போதும், அங்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.

அறிகுறிகள்

நீர்க்கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடி வயிற்றில் வலி, காய்ச்சல், பசியின்மை மற்றும் வாந்தி, உடல் சோர்வு, மனக்குழப்பம், எழுந்து நடக்கச் சிரமப்படுவது போன்றவை அறிகுறிகள். தொற்று முற்றிய நிலையில் சிறுநீரின் நிறம் மாறும். ரத்தம் கலந்திருக்கும், துர்நாற்றம் வீசும். முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் கிருமி விரைவாக ரத்தத்தில் பரவி சிறுநீரகம், மூளை, இதயம் ஆகிய முக்கிய உறுப்புகளைப் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும். எனவே எச்சரிக்கை அவசியம்.

சிகிச்சை முறைகள்

சுய சிகிச்சை செய்து கொள்வது தவறு. சிறுநீரகச் சிறப்பு மருத்துவரை அணுகி, உங்களுடைய அறிகுறிகளைக் கூற வேண்டும். அவர் சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து சரியான மருந்துகளைத் தருவார். சிறுநீர்த் தொற்றுக்கு எந்தக் கிருமிகள் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குண்டான நுண்ணுயிர்க் கொல்லி (ஆன்ட்டி பயாடிக் மருந்துகள்) மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும்.

ஒருவேளை சிறுநீரகச் செயலிழப்பு இருந்தால், மருத்துவர் மருந்தின் அளவைக் குறைத்துத். தருவார் கிருமித்தொற்று இருந்தாலும் தொந்தரவோ, அறிகுறியோ இல்லையென்றால், மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மேலும் சிறுநீரகக் கல், சிறுநீர்த் துவாரம் அடைப்பு, கர்ப்பப்பை அடி இறக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்துமே குணப்படுத்த முடிகிற பிரச்னைகளே. அதனால் அச்சம் இல்லாமல் தேவையான அறுவைசிகிச்சை செய்துகொண்டால், சிறுநீர்த் தொற்று வராமல் தடுக்கலாம்.

சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

*போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும்.

*சிறுநீரை அதிகநேரம் அடக்குவது தவறு. ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தவுடனும் அந்தப்பகுதியைத் தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

*மலம் கழித்தவுடன், தண்ணீர் கொண்டு நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீரால் சுத்தப்படுத்திய பிறகு டவல் அல்லது டாய்லெட் பேப்பரை உபயோகித்து ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

*மாதவிலக்கு நாட்களில் நாப்கினை அடிக்கடி மாற்ற வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர்த்தொற்று வர வாய்ப்பு அதிகம். எனவே, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

*சிறுநீர் கதிட்டர் பொருத்தியுள்ளவர்கள் அதைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அதைப் புதுப்பிக்க வேண்டும்.

*மாதவிடாய்க்குப் பின்னர் பிறப்புறுப்புகளில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் அப்பாகத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் களிம்பை உள்ளே தடவலாம். இது சிறுநீர்த்தொற்று வராமல் தடுக்கவும் உதவும்.

*சிறுநீரகத் தாரையில் கல், கட்டி இருந்தால் அறுவை. சிகிச்சை தேவைப்படலாம். அவசியம் செய்துகொண்டு, இதன் விளைவாக ஏற்படும் சிறுநீர்த் தொற்றிலிருந்து விடுபட வேண்டும்.

*சிறுநீர் நோய்த் தொற்றைத் தடுக்க முழு உடலையும் சுத்தமாகப் பராமரிப்பதோடு, பிறப்புறுப்புகளையும் சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம்.

*நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும், மருத்துவரின் அறிவுரைகளையும் பின்பற்றினால், மாதவிடாய் முடிந்த பருவம் மற்றும் சிறுநீர்த்தொற்று போன்ற பிரச்னைகள் இல்லாத வசந்த காலமாகவே இருக்கும்.

தொகுப்பு: தவநிதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi