சென்னை: ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு பெண்களின் உயர்கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வந்தார். அதே போல் தற்போது உள்ள தமிழ்நாடு அரசு ‘புதுமைப்பெண்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுத்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படும். குழந்தை திருமணங்களை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 1098’ என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். புகார் அளித்தவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்”
“ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது. பள்ளி பருவத்தில் காதல், திருமணம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மிக நன்றாக படித்து நல்ல இடத்திற்கு முன்னேற வேண்டும். தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றால் மாணவர்கள் கவலை மற்றும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். தன்னம்பிக்கையுடன் படித்து மீண்டும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று சென்னை சூளைமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் அவர்கள் இன்று (06.08.2024) சென்னை சூளைமேடு, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சிகள் பள்ளி குழந்தைகளிடையே சமூக விழிப்புணர்வு திறன்களை வளர்ப்பதுடன், முதியோர், பெண்களை மதிக்க கூடிய ஒரு சமுதாயம் உருவாக உறுதுணையாக உள்ளது.
மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்கும், அவர்கள் நலன் காக்கவும் தமிழ்நாடு அரசு அதற்கான சட்டத்தையும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்(ஜீன் 15) மாநில மற்றும் மாவட்ட அளவில் 4.00 இலட்சம் செலவில் அனுசரிக்கப்படுகின்றது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ.92.00 கோடி நிதி ஒதுக்கீட்டில், 36800 பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை இரசீதுகள் வழங்கப்படுகின்றது. 18 வயது நிறைவடைந்த 72,160 பெண் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ரூ.165.93 கோடி மதிப்பீட்டில் முதிர்வுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உதவி எண்.1098 செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு திட்டம், முதலமைச்சரின்”காலை உணவுத்திட்டம்” மற்றும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கும் கற்பிப்போம் திட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரூ.8.02 கோடி செலவில் நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (06.08.2024) நடத்தப்பட்டது.
சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்கள் தலைமையேற்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு உறுதி மொழிகளை பள்ளி மாணவர்களுடன் எடுத்துக் கொண்டு, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் துறைசார் கண்காட்சியை பார்வையிட்டு, பள்ளிமாணவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை மக்களுக்கு எடுத்தும் செல்லும் வகையில் களப்பணி ஆற்றுகின்ற சமூக விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களுக்கு (சின்னம் அச்சிட்ட) ஒவர் கோட் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில், 6261 அரசு பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்களில் தன்னார்வலராக 5 பேரை தேர்ந்தெடுத்து, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தினமும் காலை இம்மாணவர்கள் இறைவணக்கத்தின் போது பெண் கல்வி மேம்பாடு, பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தை உதவி எண் 1098 ஆகியவை குறித்த உறுதி மொழி எடுத்தல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இவ்விழாவில் பங்கு பெற்ற அனைத்து மாணவியருக்கும் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு வழிமுறைகள் அடங்கிய பாட அட்டவணை, மணிக்கட்டில் அணியும் பேண்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசுச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நல ஆணையர் வே. அமுதவல்லி, சென்னை பெருநகர மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்களும் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.