புதுடெல்லி: பெண்களுக்கான இடஒதுக்கீடு சலுகைஅல்ல. அது பெண்களின் உரிமை. அதை இப்போதே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி பேசினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி பேசியதாவது:
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை துரதிர்ஷ்டவசமாக பாரதிய ஜனதா தனது குறுகிய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. 1927ம் ஆண்டு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் முறையாக தனது முதல் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்தது. அவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தேவதாசி என்னும் பெண்களுக்கு எதிரான கொடுமையை ஒழித்தவர் அவர்தான். இப்படிப்பட்ட பின்னணியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை இன்னமும் நிறைவேற்றவில்லை.
இந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் பல தலைவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களது தலைவர் கலைஞர் 2014 இல் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2017 இல் இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு மீண்டும் வேண்டுகோள் வைத்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி திமுக டெல்லியில் பேரணி நடத்தியது.
அப்போதெல்லாம் அரசு சார்பில் சொல்லப்பட்டதெல்லாம், ‘நாங்கள் இந்த மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருடன் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பதுதான். இப்போது என்ன ஒருமித்த கருத்து ஏற்பட்டது, மசோதாவைக் கொண்டுவரும் முன் என்ன விவாதங்கள் நடத்தப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மசோதா ரகசியமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றப் பணியாளர்களின் சீருடை திடீரென தாமரைக்கு மாற்றப்பட்டதைப் போல இந்த மசோதாவும் திடீரென கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்தால் இந்த மசோதா இப்போதைக்கு நடைமுறைக்கு வர முடியாது. காத்திருப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த மசோதாவின் பெயர் நாரி ஷக்தி வந்தன். எங்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை. எங்களை பீடத்தில் வைக்க தேவையில்லை. எங்களை யாரும் வழிபட தேவையில்லை. எங்களை நீங்கள் தாய் என்று அழைக்கத் தேவையில்லை நாங்கள் உங்களின் தங்கைகளாகவும், மனைவியாகவும் இருக்க விரும்பவில்லை. எங்களை பீடத்தில் இருந்து இறக்கி விடுங்கள். பெண்களையும் ஆண்களுக்கு நிகராக நடத்துங்கள்.
இந்த நாட்டில் உங்களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவிற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது.
இந்த நாடு எங்களுக்குமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்குமானது. இங்கே இருப்பதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசினார்.