சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய யூடியூபர் சங்கர் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. யூடியூப் சேனலை நடத்தி அரசியல் கட்சித் தலைவர்களையும், அதிகாரிகளையும் அவதூறாகப் பேசி வருவதை சங்கர் தனது வாடிக்கையாக கொண்டிருந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனலில் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவருக்கு சங்கர் அளித்திருந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தப் பேட்டியில் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சங்கர் அவதூறாகப் பேசியிருந்தார். இந்நிலையில் சங்கரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகிய இருவரையும் கைது
செய்தனர். இதற்கிடையில், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் கைதான யூடியூபர் சங்கரை கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு நூற்றுக்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பாக நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, லால்குடி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சங்கருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 17 காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர், மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரில் பெண் காவலர்கள் குறித்த சங்கரின் பேச்சு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.