நன்றி குங்குமம் தோழி
கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு அணியப்பட்ட நகைகளின் தாக்கத்தில் உருவானதால், கோவில் நகைகள் என்கிற அடைமொழியோடு, நாகர்கோவில் கைவினைக் கலைஞர்களால் தயாராகும் பாரம்பரியம் மிக்க கோயில் நகைகள், இன்றும் பரதக்கலைஞர்களால் மிகப்பெரிய அளவில் ஆதரிக்கப்பட்டு வருகிறது. பரதம் என்ற கலையே அழகுதான். பரதக் கலைஞர்களுக்கு கூடுதல் அழகைக் கொண்டு வந்து சேர்ப்பது கோவில் நகைகளே. கோவில் ஆபரணங்களை அணிந்து பெண்கள் பரதம் ஆடும்போதுதான் இக்கலை முழுமை பெறுகிறது.
இந்தியாவில் பரதம், மோகினி ஆட்டம், கதகளி, குச்சிப்புடி, ஒடிசி, கதக், ஸத்ரியா, மணிப்புரி என நாட்டியக்கலை வடிவங்கள் பல உள்ளது. இந்தக் கலைஞர்கள் அணிகிற சூரியன், சந்திரன், காசுமாலை, ஒட்டியாணம், கைவங்கி, கிரீடம், நட்சத்திர மூக்குத்தி போன்ற உலக அளவில் பெயர் பெற்ற அணிகலன்கள் நாகர்கோவில் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு கைகளால் மட்டுமே தயாராகி வருகிறது. ஒவ்வொரு கோவில் நகை தயாரிப்பிற்கு பின்னாலும் படைப்பாற்றலும், மிகப்பெரிய நுணுக்கமும், புதிய சிந்தனையும், கவனமும், மனித ஆற்றலும் பொதிந்து கிடக்கின்றது என்றால் மெய்சிலிர்க்கத்தானே செய்யும். தேர்ச்சிப் பெற்ற இந்தக் கலைஞர்கள், தங்களின் தனித்திறன் மூலமாகவே, கற்பனைகளை கண்முன் கொண்டுவந்து நகைகளில் நிறுத்துகின்றனர்.
2006ல் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரியம் மிக்க இந்த நாகர்கோவில் கோவில் நகைகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள், பரம்பரை பரம்பரையாக குடிசைத் தொழிலாக கைகளால் தயாரித்து வந்தனர். விளைவு, நகை வடிவமைப்பு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே உரித்தானது என்கிற முறையில் ரகசியம் காக்கப்பட்டு,
இன்று அடுத்த தலைமுறை இளைஞர்கள் வெவ்வேறு தொழில்களைத் தேடி வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர். கைவினைக் கலைஞர்களின் பற்றாக்குறையால், பாரம்
பரியமிக்க நாகர்கோவில் கோவில் நகை தயாரிப்பு தொழில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது. ஆனால் கோவில் நகைகளுக்கான தேவையோ மிகமிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில்தான், நகை தயாரிப்பு தொழிலில் வேலை தேடுபவர்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும் முயற்சியாக, சர்வதேச நகை வடிவமைப்பு நிறுவனங்களும், ஏற்றுமதி சந்தைகளும், இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அனுபவமிக்க நகை வடிவமைப்பாளர்களுக்கு பலவிதமான உதவிகளையும் வேலை வாய்ப்பையும் அளிக்க முன்வந்துள்ளன. இந்த வகையில், கோவில் நகைகளை வடிவமைக்க பயிற்சி வழங்கி வரும், கோவில் நகை தொழில் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுரேஷ் (எ) நாகராஜனிடம் பேசியதில்…
‘‘எனக்கும் இதுதான் குலத் தொழில். நாங்கள் சகோதரர்கள் மூவருமே எங்கள் மூதாதையர்களைத் தொடர்ந்து கோவில் நகை தயாரிப்புத் தொழிலில்தான் இருக்கிறோம். கொரோனா நேரத்தில் மிகப்பெரிய அளவில் தொழில் நலிவடைய, மாற்றுத் தொழிலைத் தேடி கைவினைக் கலைஞர்கள் நகர்ந்துவிட்டனர்.எங்களின் வடசேரி பகுதியில் மட்டுமே 400 குடும்பங்களுக்கு மேல் இந்தத் தொழிலில் இருந்து வந்த நிலையில், இன்று 150 குடும்பங்கள் கூட இல்லை. திருவிழா காலங்களில் நகைக்கான ஆர்டர்கள் அதிகமாகக் குவியும். ஆள் பற்றாக்குறையால் எங்களால் தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையை விளக்கி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஆட்சியரின் சரியான முன்னெடுப்பின் காரணமாக, தொடர்ச்சியாக பெண்களையும் நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கோயில் நகை வடிவமைப்புத் தொழிலில் பெண்கள் தனித்துவமாக இல்லை. கணவர் அல்லது சகோதரர்களைச் சார்ந்துதான் தொழிலுக்குள் உதவியாக இருந்து வந்தனர்.குறிப்பாக எத்தனை இருந்தாலும் இன்னொன்றுக்கு பெண்களை ஏங்க வைக்கும் பெண்களின் ஈர்ப்புக் குறையாத விஷயம் நகைகளே.
நாகரிக மாற்றத்திலும் பெண்கள் மாணிக்கம், மரகதம், முத்து, பவளம் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த ஜிமிக்கிகளை விரும்பி அணியத்தானே செய்கின்றனர்’’ என்றவர், ‘‘இயல்பிலே பெண்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்பதால், ஆர்வம் உள்ள பெண்களை கோவில் நகை தயாரிப்புத் தொழிலுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, பெண்களுக்கும் நகை தயாரிப்பு பயிற்சி வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பு செய்தித் தாள்களில் வெளியானது.
பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்தும் 1500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. முன்னுரிமை அடிப்படையில் எல்லா மாவட்டங்களில் இருந்தும் முதல் 20 பெண்களை தேர்வு செய்து 60 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. உதவித் தொகையாக இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாயும் வழங்கப்பட்டது.
பயிற்சியில் கோவில் நகை என்றால் என்ன? இந்தத் தொழிலின் பாரம்பரியம் என்ன? இது எப்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் அடையாளமானது? மெஷின் தயாரிப்பாக இல்லாமல் கைவினைப் பொருளாக மட்டுமே இருப்பது ஏன்? புவிசார் குறியீடு பெற்றது ஏன்? போன்ற தகவல்களை வழங்கியதுடன், நகைகளுக்குத் தேவைப்படும் வடிவங்களை படங்களாக வரைவதில் தொடங்கி, வெள்ளித் தகடு அடிப்பது, தகட்டின் மேல் வடிவங்களை நுணுக்கமாக வரைவது, மெழுகு அடைப்பது, கல் வேலைப்பாடுகள், முத்து கட்டுவது, தங்க முலாம் பூசுவது, நூலில் போடும் குஞ்சலம் போன்றவையும் அடுத்தடுத்து பயிற்சியாக வழங்கினோம்.பயிற்சி முடித்த பெண்கள் வீடுகளில் இருந்தோ அல்லது ஓரிடத்தில் இணைந்தோ ஆர்டரின்பேரில் நகைகளை செய்து கொண்டு வந்து எங்களிடம் கொடுக்கலாம். இவர்களைத் தொடர்ந்து, அடுத்து 20 பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’’
பொன்னியின் செல்வனில் இடம் பிடித்தது டெம்பிள் ஜுவல்லரி நகைகளே!
‘‘பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பிடித்த அத்தனை நகைகளும் ஒரிஜினல் டெம்பிள் ஜுவல்லரிதான். மிகப்பெரிய அளவில் சந்தைப்படுத்தப்பட்டு, வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் நாகர்கோவில் புவிசார் குறியீடு கோவில் நகைகள் 18ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே நாகர்கோவிலின் பரம்பரைத் தொழிலாக இன்றும் தொடர்கிறது.
எனது முன்னோர்கள் மன்னராட்சி காலத்தில் நாணயம் அடிப்பது, செப்புக்காசு, வெள்ளிக் காசு தயாரிப்பு, மன்னர்களின் ஆபரணம் தயாரிப்பு, கோவில் அலங்கார நகை தயாரிப்பு, அரண்மனை நடன மங்கைகள், தேவதாசிகளின் நகைகள் தயாரிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கினர். கற்பனையும் இயற்கையும் கலந்தே அன்னமாகவும், மயிலாகவும், பிச்சிப்
பூக்களாகவும், யாளியாகவும், யானையாகவும், லெஷ்மி, சரஸ்வதி, மான், கிளி, பறவைகள், பூக்களின் வடிவங்களையும், மிருகங்களையும் வைத்து அணிகலன்களை உருவாக்கினர். இன்றும் அதே வடிவ முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மன்னர் ஆட்சியில் மொத்த நகையுமே தங்கத்தில் தயாரானது. காலப்போக்கில் தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாய் வெள்ளியில் தயாரிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் வெள்ளி, 30 சதவிகிதம் தங்கம் சேர்க்கப்படுகிறது. ஒரு முழுமையான பரத நாட்டிய செட் 5 லட்சத்திற்கு மேல் விற்பனையாகும்.பரதக் கலைஞர்களுக்கான அலங்கார நகை என ஆரம்பித்து இன்று திருமண வீடுகளில் பெண்கள் அணிகிற ஆபரணங்களாகவும் மாறியிருக்கிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் சென்னையில் இருந்தும், கோயில் நகரங்களான காஞ்சிபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற ஊர்களில் இருந்தும் அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் குவியும்.
கலைகளின் தாயகமான கேரளாவிலும் குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதகளி போன்ற கலைகள் அதிகம் இருப்பதால் அந்த மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் தொடர்ந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மைசூர், பெங்களூருவில் இருந்து அதிகமாக ஆர்டர்கள் வரும். வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக கோயில் நகைகளை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: மணிகண்டன்