சென்னை: ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணுக்கு கதிர்வீச்சு உதவியுடன் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனை செய்துள்ளது. ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் உள்ள காவேரி புற்றுநோய் சிகிச்சை மையம், மீண்டும் ஏற்பட்ட தீவிர லிம்போபிளாஸ்டிக் ரத்தப் புற்றுநோயுடன் உயிருக்கு போராடிய 29 வயது பெண்மணிக்கு, ‘முழுமையான எலும்பு மஜ்ஜை மற்றும் வடிநீரகிய ஊடுகதிர் சிகிச்சை’ எனப்படும் மிகவும் பிரத்யேகமான கதிர்வீச்சு சிகிச்சையின் உதவியுடன் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
முந்தைய சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டதால், அந்த நோயாளிக்கு இரண்டு கட்ட நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் இலக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தானமளிக்க பொருத்தமானவராக கண்டறியப்பட்ட அவரது சகோதரியிடமிருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜையின் மூலம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மீண்டும் வராமல் தடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும், அதே சமயம் பக்க விளைவுகளைக் குறைக்கவும், இந்தியாவில் அரிதாகவே கிடைக்கப்பெறும் அதிநவீன கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை மருத்துவ குழுவினர் பயன்படுத்தினர்.
இது தொடர்பாக மருத்துவர் அர்ஷத் ராஜா கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட சிகிச்சைகளிலேயே இது அதிக சவால்கள் நிறைந்ததாகவும், அதேசமயம் மிகுந்த மனநிறைவை அளித்ததாகவும் இருந்தது. நோயெதிர்ப்பு சிகிச்சை, துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் உடன்பிறந்த சகோதரியிடமிருந்து தானமாகப் பெற்ற பொருத்தமான ஸ்டெம் செல்கள் மூலம் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இணைந்த ஒரு கலவையான சிகிச்சை இப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டது. இந்நோயாளி இந்த முழு செயல்முறையையும் மிகக் குறைவான சிக்கல்களுடன், தைரியத்துடன் சிறப்பாகத் தாங்கிக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.