கொல்கத்தா: பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாஜி முதல்வர் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில், கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட சிலர் மீதான பிடியை சிபிஐ இறுக்கி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று கொல்கத்தாவின் பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் வீடு, மருத்துவமனையின் தடயவியல் துறையின் டாக்டர் தேபாஷிஷ் சோமின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் தேபாஷிஷ் சோமும், சந்தீப் கோஷுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால், இருவரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. முன்னதாக மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக நேற்று சிபிஐ வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று கொல்கத்தாவின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘சிபிஐ போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து முன்னாள் முதல்வர், தடயவியல் துறை டாக்டர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க வரும் 31ம் தேதி வரை தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஒப்பந்ததாரரான பிப்லப் சின்ஹாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் உட்பட 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடுகள் மற்றும் பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு தொடர்பாகவும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.