உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் அருகே ராஜ வாய்க்கால் கரையில் கடந்த 25ம் தேதி பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த பெண் நைட்டி அணிந்திருந்தார். தகவலறிந்த மடத்துக்குளம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கொழுமம் மேற்கு தெருவை சேர்ந்த 29 வயது பெண் என்பதும், அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? என்பது தொடர்பாக விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி (32) மற்றும் கொழுமத்தை சேர்ந்த லட்சுமியின் கள்ளக்காதலனான தனியார் பஸ் டிரைவர் பாண்டித்துரை (27) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணை பாண்டித்துரை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதும், இதற்கு லட்சுமி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் நாகமுத்து என்பவருக்கும் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கண்டித்தனர். கடந்த 24ம் தேதி இருவரையும் அந்த பெண்ணின் கணவர் சேகர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். குடும்பத்தினரிடம் அடி வாங்கிய பெண் தான் அணிந்திருந்த நைட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறினார். இதனை பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சுமி பார்த்துள்ளார். பெண்கள் மீது சபலம் கொண்ட பாண்டித்துரைக்கு அந்த பெண் மீதும் ஒரு கண் இருந்துள்ளது.
இது லட்சுமிக்கு தெரிந்திருந்ததால் அவர் வெளியேறி செல்லும் தகவலை பாண்டித்துரைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தேடி சென்ற பாண்டித்துரை விசாரித்தபோது, தன்னை உறவினர் ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, பாண்டித்துரை அந்த பெண்ணை தனது பைக்கில் ஏற்றி சென்றார். வழியில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் ராஜவாய்க்கால் பகுதிக்கு சென்றபோது, பாண்டித்துரைஅந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்து பாண்டித்துரை அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து, துணியால் கை, கால்களை கட்டி அமராவதி ராஜ வாய்க்காலில் போட்டுவிட்டு பைக்கில் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாண்டித்துரையையும், லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.