பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி இவரது மகள் வினோலியா(24). இவர் முந்திரி தொழில் செய்து வருகிறார். சிறிய அளவில் முந்திரி பயிர் வாங்கி விற்பனை செய்து வந்தார். பின்னர் பொதுமக்களிடம் கூடுதல் விலை கொடுத்து முந்திரி பயிர் வாங்கி விற்று வந்தார். அதிக லாபம் கிடைப்பதால் ஏராளமானோர் வினோலியாவிடம் முந்திரி பயிர் விற்றனர். ஆரம்பத்தில் ஒழுங்காக பணத்தை செட்டில் செய்து வந்த வினோலியா பின்னர் சரியாக செட்டில்மென்ட் செய்யவில்லை.
கடந்த 6 மாதங்களில் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு முந்திரி பயிர்களை வாங்கி பணம் தராமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை பண்ருட்டி அருகே சாத்திப்பட்டில் உள்ள அடகு கடை ஒன்றுக்கு அடகு வைத்த நகையை மீட்க வினோலியா வந்தார். இதுகுறித்து தகவலறிந்து அவரிடம் முந்திரி கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லோரும் அங்கு ஒன்று கூடினர். பணத்தை கொடுத்தால்தான் உன்ைன விடுவிப்போம் என கூறி வினோலியாவை சிறை பிடித்தனர். இரவு முழுவதும் அவரை கிராமத்திலே வைத்திருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் இன்று காலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் இருந்து வினோலியாவை மீட்டு காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.