பாட்னா: ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவு விவகாரத்திற்கு மத்தியில், என் வாழ்க்கையை அழித்தவர்களை விடமாட்டேன் என்று கட்சியை விட்டு நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் சபதம் விடுத்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவைக் கட்சியிலிருந்து நீக்கினார். ஒரு பெண்ணுடன் 12 ஆண்டுகளாகத் உறவில் இருப்பதாக தேஜ் பிரதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவே இதற்குக் காரணமாகும்.
இந்தப் பதிவு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தேஜ் பிரதாப் விளக்கமளித்தார். இருப்பினும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, லாலு பிரசாத் அவரை 6 ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து நீக்கியதுடன், குடும்பத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், தேஜ் பிரதாப் இதுகுறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘கட்சியில் உள்ள 4 முதல் 5 பேர் கொண்ட குழுவின் சதியால்தான் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.
என் வாழ்க்கையை அழித்த அவர்களை நான் சும்மா விடமாட்டேன். விரைவில் அவர்களின் பெயர்களை வெளியிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். அதே சமயம், எனது தம்பி தேஜஸ்வி யாதவ் வரும் சட்ட மன்ற தேர்தல் மூலம் முதல்வராவதற்குத் எனது முழு ஆதரவும் ஆசீர்வாதமும் அளிப்பேன். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பீகார் அரசிடம் கோரிக்கை விடுக்கிறேன்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
என் வாழ்க்கையை அழித்த அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று கூறியுள்ள தேஜ் பிரதாப், தனது தம்பியான தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளதால் யாரை பழிவாங்கப் போகிறார்? என்பது குறித்த அரசியல் கருத்துகள் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.