மதுரை: வேறு சமூகப்பெண்ணை காதலித்தவரை ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், அரசு தரப்பில் விளக்கமளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அப்புவிளையைச் சேர்ந்த கண்ணியப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திசையன்விளை பேருந்து நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்கிறேன். என் கடைசி மகன் முத்தையா (19), சங்கனாகுளத்தில் அழைப்பிதழ் விற்பனை கடையில் பணியாற்றினார்.
அவரும், அங்கு பணியாற்றிய வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்தனர். விஷயம் தெரிந்த அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என் மகனை மிரட்டினர். கடந்த ஜூலை 23ல் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்தையா வீடு திரும்பவில்லை. தேடிப் பார்த்தபோது கொலை செய்யப்பட்ட நிலையில், கால்வாயில் பிணமாக கிடந்தார்.
முதலில் வன்ெகாடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார், பின்னர் வன்கொடுமை பிரிவை நீக்கிவிட்டனர். என் மகன் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே, என் மகன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி டி.நாகர்ஜூன், மனுவிற்கு அரசுத் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.