புழல்: சோழவரம் அருகே, மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார். சோழவரம் அடுத்த பூதூர் அம்பேத்கர் தெரு சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி கனகா(57). நேற்று காலை இவர் வீட்டின் வெளியே வந்தார். அப்போது லேசான காற்று அடித்தது. அப்போது வீட்டின் முன்பு மேலே சென்ற மின் வயர் திடீரென அறுந்து கனகா மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், ‘‘பூதூர், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. மேலும் மின்வயர்கள் ஆங்காங்கே ஜாயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது. இதனால் காற்று அடித்து இப்போது இந்த மின் வயர் அறுந்து விழுந்ததில் பலியானார்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட சோழவரம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் ஒரு உயிர் பலியானது. இனி வரும் காலங்களிலாவது எலும்புக்கூடு போல் உள்ள மின்கம்பங்களை மாற்றவும், பழைய மின் வயர்களை அகற்றி புதிதாக வயர்களை அமைக்கவும் சம்பந்தப்பட்ட சோழவரம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என கோரினர்.