பந்தலூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 5 பவுன் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை 9வது மைல் பகுதியில் வசித்து வருபவர் முகம்மது. தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி மைமூனா (55) மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டில் மைமூனா தலை, முகம், காதில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்கு பதிந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.