புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு பற்றி தாமாக முன் வந்து விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அரசு வக்கீலிடம் சரமாரி கேள்விகளை கேட்டது. கொலை நடந்த மருத்துவமனைக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்க அரசு மற்றும் அம்மாநில காவல்துறை ஆகியவைக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெயர்கள் அனைத்து ஊடகங்களிலும் எப்படி வெளியானது.
இந்த விவகாரம் வெறும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை பற்றிய கொடூரத் தன்மை மட்டுமல்லாமல், மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கேள்வியாக எழுந்துள்ளது. பணிபுரியும் இடங்களில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது என்பது அவர்களுக்கான சம உரிமை மறுக்கப்படுவதாக அர்த்தமாகும். அவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் தனி கழிப்பிடம் கூட இல்லாத சூழல் நிலவுவதை பார்க்க முடிகின்றது. மேலும் உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதான் அந்த இறந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மரியாதையா?. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய பணி குழுவை நாங்கள் அமைக்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கு வங்க மாநில அரசு தனது அதிகாரத்தையும் காட்டக் கூடாது. போராட்டக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மருத்துவமனைக்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை சூறையாடப்பட்டு உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதனை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த சில காலங்களாக மருத்துவர்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் அவர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள் ஆனால் இவை தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஆனால் அதனை தடுக்கும் விதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்காக நாடு காத்திருக்க முடியாது. மேலும் மருத்துவர்களை பாதுகாக்க மாநில அளவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது கிடையாது. இரவு நேரங்களில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு ஓய்வு அறைகள் இருப்பது கிடையாது. பல இடங்களில் மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரத்திற்கும் மேல் பணி செய்யும் விதமாக ஆளாக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு சுகாதார சூழல் கூட கிடையாது. பல மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் கூட மருத்துவர்களுக்கு செய்து தரப்படுவதில்லை. சிசிடிவி கேமராக்கள் கிடையாது. பாதுகாப்புக்கு இருக்கும் ஊழியர்களிடம் துப்பாக்கிகள், தோட்டாக்கள் போதுமான அளவில் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு அவற்றை பயன்படுத்த தெரிவதில்லை. இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் தேவைப்படுகிறது.
பெண் மருத்துவரின் மரணத்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனை தற்கொலை என்று மூடி மறைக்க முயற்சி செய்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியதாகும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது என்று காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வியாழக்கிழமைக்குள் சிபிஐ தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், ‘‘இந்த விவகாரத்தில் தற்போது வரையில் என்னென்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். விசாரணையின் நிலவரம் என்ன. மருத்துவமனை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. அரசு இந்த விவகாரத்தில் தற்போது வரையில் எந்த மாதிரியான செயல்களை மேற்கொண்டு வருகிறது. காவல்துறை அடுத்தக்கட்டமாக என்ன செய்ய உள்ளது ஆகிய அனைத்து முழு விவரங்களும் சமர்பிக்கப்படும் நிலை அறிக்கையில் தெளிவாக இருக்க வேண்டும். இதையடுத்து அதனை உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்யும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
* தேசிய உயர்நிலை குழு அமைப்பு
பயிற்சி மருத்துவர் இறந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள ஒன்பது மருத்துவர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஆகியோரை கொண்ட தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் நேற்று உருவாக்கியுள்ளது. அதில், ‘‘அறுவை சிகிச்சை நிபுணர், வைஸ் அட்மிரல், ஆர்.சரின் டாக்டர், டி.நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், பேராசிரியை அனிதா சக்சேனா, டெல்லி எய்ம்ஸ் தலைமை இதய மருத்துவ நிபுணர் பேராசிரியர் பல்லவி சப்ரே, டீன் கிராண்ட் மருத்துவக் கல்லூரி மும்பை டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா, எய்ம்ஸ் நரம்பியல் துறை ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதேப்போன்று மேற்கண்ட குழுவில் ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலாளர், ஒன்றிய உள்துறை செயலாளர், சுகாதாரத்துறையின் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழுவின் தலைவர் ஆகியோரும் குழுவில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாகவும், அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பணிக் குழுவானது பாதுகாப்பு, மருத்துவ துறையை சேர்ந்தவர்களின் நல்வாழ்வு, பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பது, மருத்துவர்களின் கண்ணியமான பணியைத் உறுதி செய்வதற்கான தேசியத் திட்டத்தை உருவாக்கும். இதைத்தொடர்ந்து இந்தக் குழுவானது அடுத்த மூன்று மாதத்திற்குள் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பணிக் குழுவின் முக்கிய பணிகள்
* அவசர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் பாதுகாப்பு.
* ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தடுப்பதற்கு தேவையான அமைப்புகளை உருவாக்க வேண்டும்
* தேவையற்ற நபர்கள் மருத்துவமனைகளுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்
* மருத்துவமனைகளில் அதிக அளவு கூட்டம் கூடும்போது அதை நிர்வகிப்பதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும்.
* பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம் பதிவு செய்வதற்கான அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும்.
* மருத்துவர்கள் ஓய்வு அறைகள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுப்பதற்கான அறைகளை உருவாக்க வேண்டும்.
* மருத்துவ தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும்.
* மருத்துவமனை உட்பட அதுசார்ந்த அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
* நெருக்கடியான சூழலை கையாள்வதற்கான பயிற்சிகளை தர வேண்டும்
* நிறுவன ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிற்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
* அடிதடி போன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறை உதவியை விரைவாக கேட்க வேண்டும்.
* மருத்துவர் தொழிலில் ஈடுபடுபவர்கள் அவசர தேவைக்காக இலவச தொலைத்தொடர்பு எண்களை உருவாக்க வேண்டும்.