‘‘டெல்டாவில் தனது ஆதரவாளர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்க முடிவு பண்ணிட்டாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவில் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கையை சேலத்துக்காரர் தீவிரமாக கண்காணித்து வருகிறாராம்.. அவ்வப்போது, இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சேலத்துக்காரரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார்களாம்.. இது சேலத்துக்காரருக்கு கடும் டென்ஷனை ஏற்படுத்தியதாம்.. தொடர்ந்து, டெல்டாவில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் சிலரது நடவடிக்கையை கண்காணிக்க தனியாக ஒரு டீம் போட்டுள்ளாராம்..
மேலும், டெல்டாவில், தனக்கு நெருக்கமாக உள்ள ஆதரவாளர்களுக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும், சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலைகள் திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. இதனால் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறாங்களாம். குறிப்பாக, டெல்டாவில் உள்ள இலை கட்சி நிர்வாகிகள் சிலர், சேலத்துக்காரரை சந்தித்து, உட்கட்சி பூசல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிவித்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்சம் வாங்கி சிக்கினாலும் தனி ரூட்டில் பயணிப்பதை மீண்டும் வேகப்படுத்தி இருக்கிறாராமே மாநகராட்சி மண்டல உயர் அதிகாரி ஒருத்தர் தெரியுமா?..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில், பல சர்ச்சைகளில் சிக்கிய மத்திய மண்டல உயரதிகாரி ஒருவர், எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லையாம்.. கரன்சி கைமாறினால் மட்டுமே கோப்புகள் நகருதாம்.. இவர், காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறாராம்..
இளநிலை உதவியாளர்கள், வரி வசூலர்கள் என பலரும், கையெழுத்து வாங்க, கோப்புகளை எடுத்துச்சென்றால், அவர்களை பல மணி நேரம் நிற்க வைத்து, பெண்ட் எடுத்து விடுகிறாராம்.. எம்.எல். புக்கிலும் கையெழுத்து போடுவதில்லையாம்.. அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள் என யாரேனும் சிபாரிசுக்கு சென்றால் அவர்களுக்கும் இதே கதிதானாம்.. இவர், ஏற்கனவே கோவை நேரு ஸ்டேடியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பெரும் தொகையை லஞ்சமாக பெற்று, சர்ச்சையில் சிக்கினார்.
தற்போதும் அதே ரூட்டில் பயணிக்கிறாராம்.. இவர், ஏற்கனவே மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பணிபுரிந்தபோது இதே பிரச்னையில் சிக்கினார். அதனால், அங்கிருந்து மாற்றப்பட்டார். தற்போது, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் பணியிடத்தையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.. அங்கும் வசூல் மழைதானாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பெண் டிஜிபியின் ஆர்டரை நிறுத்தி தடாலடி காட்டியிருக்கிறாரமே உள்துறை அமைச்சர்…’’ என பரபரப்புடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் அதிகாரம் யாருக்கு என்பதில் ஆளுங்கட்சி கூட்டணிக்குள் உரசல் நீடித்து வருகிறது. முதன்மை அமைச்சராக உள்ள புல்லட்சாமியை மீறி அதிரடி உத்தரவுகளை நடுநிலை நாயகர் மட்டுமின்றி டெல்லியில் இருந்து வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் பிறப்பித்து வருவதாக தகவல் உலாவுகிறது. இதனிடையே நேற்றைய தினம் காக்கிகள் துறையில் அதிரடியாக பணியிட மாறுதல் உத்தரவு வெளியாகியிருக்கு.. காவல் நிலைய அதிகாரிகள் தொடங்கி காவலர்கள் வரை ஒரே நாளில் 414 போலீசாருக்கு இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்…
காவல்துறை தலைமையக எஸ்பியிடம் இருந்து உத்தரவு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், திடீரென அவை அனைத்தும் சீனியர் எஸ்பியால் நிறுத்தப்பட்டுள்ளதாம்.. டெல்லியில் இருந்து வந்து புதிதாக பதவியேற்ற பெண் டிஜிபியின் அனுமதியின்றி அவசர கதியில் உத்தரவு வெளியானதாக தகவல் பரவி காக்கி துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது..
ஆனால் அதிகார வட்டாரத்தில் விசாரித்தபோது, உள்துறை அமைச்சரான சிவாயமானவருக்கு தெரியாமலே டிஜிபி அனுமதியுடன் உத்தரவு வெளியானதாகவும், இதனால் டென்ஷன் ஆன சிவாயமானவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனியர் எஸ்பி மூலம் உத்தரவுகளை நிறுத்தி தடாலடி காட்டியதாக தகவல் வெளியாயிருக்கு.. இந்த தடாலடியால் புதுச்சேரிக்கு வந்துள்ள அந்த பெண் டிஜிபி ஷாக் ஆகி இருப்பதுதான் தற்போதைய ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலி டாக்டர் சிகிச்சையால பெண் இறந்த விவகாரத்தால மாவட்டமே அதிர்ச்சியில ஆடிப்போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல குடியேற்றம் ஏரியாவுல காய்ச்சலுக்காக பெண் ஒருத்தரு கிளினிக்குக்கு போயிருக்காங்க.. போன இடத்துல மருந்து மாத்திரைகளை கொடுத்து ஊசியும் போட்டு சிகிச்சை அளிச்சிருக்காரு அங்க இருந்த டாக்டரு.. இதுல காய்ச்சலுக்காக போன பெண் திடீர்னு இறந்துட்டாங்களாம்.. இறந்த பெண்ணோட குடும்பத்துக்கு 5 எல் கொடுத்து சரிகட்டியிருக்காரு அந்த டாக்டரு.. இது சமூக வலைதளங்கள்ல வைரலாகி, கடைசியில குடியேற்றம் காக்கிகளுக்கும் புகாராக போயிருக்குது.
அப்புறம் காக்கிகள் நடத்துன விசாரணையில, அந்த கிளினிக்ல இறந்த பெண்ணுக்கு வைத்தியம் பார்த்தது, டாக்டர் இல்ல, டிப்ளமோ நர்சிங் படிப்பைக்கூட முழுசா முடிக்காத ெபண் என்று தெரியவந்திருக்குது.. இதனால அதிர்ச்சியாகி அந்த போலி டாக்டருக்கு கைவிலங்கை மாட்டி ஜெயில்ல அடைச்சிருக்காங்க.. இந்த சம்பவத்தால குடியேற்றம் ஏரியா மட்டுமில்லாம, வெயிலூர் மாவட்டமே அதிர்ச்சியில ஆடிப்போயிருக்குது.. வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை மாவட்டங்கள்ல அதிகளவுல இதுபோல போலிகள் சிகிச்சை அளிச்சிட்டு வர்றாங்களாம்.. சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் களத்துல உடனே இறங்கணும்னு கோரிக்ைக குரல் ஓங்கி ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.