மும்பை: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பாஜ கூட்டணி அரசு அவர்களுக்கு துணை நிற்பது வருத்தமளிக்கிறது’ என சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். மும்பை அருகே பத்லாபூரில் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு அப்பள்ளியின் துப்புரவு தொழிலாளி பாலியல் தொல்லை தந்த விவகாரம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டத்தை நேற்று நடத்தின. ஆனால் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பந்த் போராட்டம் ரத்து செய்யப்பட்டு, பல இடங்களில் ஆளும் பாஜ கூட்டணி அரசை கண்டித்து மவுன போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மும்பையில் நேற்று நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கட்சி தொண்டர்கள் மத்தியில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘‘மகாராஷ்டிராவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மகாயுதி அரசை அகற்ற வேண்டியது அவசியம்.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களுடன் அரசு துணை நிற்பது வேதனை அளிக்கிறது. சகோதரிகள் பாதுகாப்பாக இருந்தால்தான் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்ற முழக்கத்துடன் கையெழுத்து பிரசாரம் நடத்துங்கள். அதை மும்பை உயர் நீதிமன்றத்தில் சமர்பிப்போம். நீதிமன்றம் எங்களின் பந்த் போராட்டத்தை நிறுத்தலாம், ஆனால் எங்கள் குரலை அடக்க முடியாது’’ என்றார். புனே ரயில் நிலையத்தில் நடந்த அமைதிப் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தியது.