லத்தூர்: கடந்த 2021ம் ஆண்டு தொற்றுநோய் பரவியபோது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா பாதித்த பெண்ணை கொன்றுவிடும்படி மருத்துவர் சக மருத்துவரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வைரலாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கீர் அரசு மருத்துவமனையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கவுசர் பாத்திமா(41) என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானாதால் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது கணவர் உடன் தங்கி இருந்தார். அந்த பெண் அனுமதிக்கப்பட்ட 7வது நாளில் மருத்துவர் டாங்கே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
அருகே கவுசர் பாத்திமாவின் கணவர் அமர்ந்திருந்துள்ளார். அப்போது மருத்துவரை சக மருத்துவரான கூடுதல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் சஷிகாந்த் தேஷ்பாண்டே தொலைபேசியில் அழைத்துள்ளார். ஸ்பீக்கரை ஆன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது மருத்துவமனையில் படுக்கை எதுவும் காலியாக இல்லை என்று டாங்கே கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய மருத்துவர் தேஷ்பாண்டே அந்த தயாமி பெண்நோயாளியை கொன்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த ஆடியோ கடந்த 2ம் தேதி சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் உத்கீர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 24ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேஷ்பாண்டே மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் டாங்கேவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவர் வந்தவுடன் அவரது போன் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.