புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் மருத்துவர்கடந்த 9ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 4 பேரிடம் நேற்று முன்தினம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள ஒன்றிய தடயவியல் அறிவியல் சோதனை கூடத்தை சேர்ந்த நிபுணர்கள் சோதனையை நடத்தினர். இந்த நிலையில், கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் உள்ள சஞ்சய் ராயிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
சிபிஐ சோதனை: இதற்கிடையே, ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பாக அந்த கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ்,முன்னாள் துணை முதல்வர் சஞ்சய் வஷிஷ்ட் உட்பட அதிகாரிகள்,காண்ட்ராக்டர்கள் என மொத்தம் 15 பேரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சந்தீப் கோஷிடம் காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.