கொல்கத்தா: பெண் மருத்துவர் பலாத்கார கொலை குற்றவாளியின் சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அவர் ‘ரெட் லைட்’ ஏரியா முதல் கருத்தரங்கு கூட்டம் வரை நடந்தது என்ன? என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையின் தன்னார்வலராக செயல்பட்டு வந்த சஞ்சய் ராய் (33) என்பவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுவதால், இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ விசாரணை, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.
தற்போது சிபிஐ-யின் காவலில் இருக்கும் சஞ்சய் ராய் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 8ம் தேதி ெபண் பயிற்சி மருத்துவர் மருத்துவனையின் கருத்தரங்கில் தூங்கிக் கொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் ெசய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகள், தடயங்களை வைத்து பார்க்கும் போது கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், அவரது நண்பருடன் சம்பவம் நடந்த இரவு பாலியல் தொழில்புரியும் பெண்கள் வசிக்கும் சிவப்பு விளக்கு (ரெட்லைட் ஏரியா) பகுதியான சோனகாச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது சஞ்சய் ராய் மது அருந்தியுள்ளார். அவருடைய நண்பர் பாலியல் பெண் தொழிலாளியின் வீட்டிற்குள் சென்றார். அப்போது சஞ்சய் ராய் பாலியல் தொழிலாளியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். பின்னர் அன்றிரவு 2 மணியளவில் இருவரும் தெற்கு கொல்கத்தாவின் மற்றொரு சிவப்பு விளக்கு பகுதியான செட்லா என்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற பெண்ணை சஞ்சய் ராய் சீண்டியுள்ளார். பின்னர் ஒரு பெண்ணிடம் அவரது நிர்வாண புகைப்படங்களை செல்போனில் அனுப்புமாறு கேட்டுள்ளார். இதற்கிடையில், சஞ்சய் ராயின் நண்பர் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.
அதிகாலை 3.50 மணியளவில் ஆர்ஜி கர் மருத்துவமனைக்கு சஞ்சய் ராய் வந்தார். போதையில் இருந்த அவர் ஆபரேஷன் தியேட்டர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அதிகாலை 4.03 மணியளவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற அவர், நேராக மூன்றாவது மாடியில் உள்ள கருத்தரங்கு அரங்கிற்குச் சென்றார். போலீஸ் விசாரணையின் போது, பெண் பயிற்சி மருத்துவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்ததாக சஞ்சய் ராய் ஒப்புக்கொண்டார். அப்போது பெண் மருத்துவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் டாக்டர் எவ்வளவோ தடுத்தும், அவரை வலுக்கட்டாயமாக அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
அடுத்த நாள் காலை (ஆக. 9) மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்தில் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து சஞ்சய் ராயை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், டெல்லி சிபிஐ தலைமையக அதிகாரிகளின் மேற்பார்வையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய நிலையில் சஞ்சய் ராய் மட்டுமே முதன்மை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இருந்தும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் நடந்ததா? இதன் பின்னணி என்ன? நள்ளிரவில் கருத்தரங்கில் நடந்தது என்ன? இதற்கு முன்பு மருத்துவமனையில் இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் நடந்ததா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
நடிகைக்கு பலாத்கார மிரட்டல்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி வெளியிட்ட பதிவில், ‘பெண்களுக்கு நீதி கேட்டு போராடுகிறோம். ஆனால் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதாகக் கூறும் சிலரால், எங்களுக்கு பலாத்கார அச்சுறுத்தல்கள் வருகின்றன. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் பலாத்கார மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வருகின்றன’ என்று குறிப்பட்டுள்ள அவர், கொல்கத்தா காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு அந்த பதிவை டேக் செய்துள்ளார்.
சர்வதேச இடத்தை பிடித்த சோனகாச்சி
கொல்கத்தாவின் சோனகாச்சி இந்தியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியாகும். ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகள் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் முழுநேர தொழிலே பாலியல் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி, அவர்களின் மூலம் வருவாய் ஈட்டுவது தான். ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்தாலும், அவர்களின் வாழ்க்கை மேம்பாடு என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகளவில் முதல் 10 சிவப்பு விளக்கு பகுதிகளில் சோனகாச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் சோய் கவ்பாய் சிவப்பு விளக்கு பகுதி மிகவும் பிரபலமானது. இந்த சிவப்பு விளக்கு பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தாவின் சோனகாச்சி உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாகும். இவர்களின் வாழ்க்கை பின்னணியை வைத்து ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
அதற்கு சர்வதேச விருதுகளும் கிடைத்தது. அதற்கடுத்த இடங்களில் நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள மவுலின் ரூஜ், சிங்கப்பூரின் டவர், கெயிலாங், மெக்சிகோவின் டிஜுவானா, பிரேசிலின் கோபகபனா, ஜப்பானின் கபுகிச்சோ ஷின்ஜுகு, ஹாங்காங்கின் வான் சாய் போன்ற நகரங்கள் ரெட் லைட் ஏரியாவுக்கு மிகவும் பிரபலமானவை ஆகும்.