பூந்தமல்லி: வீட்டில் உணவு சாப்பிட்ட பின் மூச்சு திணறி உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிப்பு தெரிவித்து, போலீசாருடன் உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பூந்தமல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி, திருமால் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (45), நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஜெயந்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜெயந்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை நம்பாமல் அருகில் இருந்த பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு ஜெயந்தியை கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்களும் ஜெயந்தி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த பூந்தமல்லி போலீசார், ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயந்தியின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜெயந்தியின் உடலை காரில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களது வீட்டிற்குச் சென்று, ஜெயந்தியின் உடலை மீட்டு மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு ஜெயந்தியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஜெயந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.