*மனநலம் பாதிக்கப்பட்டவரா?- போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி : அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்த பெண் போலீசில் சிக்கினார். மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், ஜனகராஜ் நகரை சேர்ந்த பொன்னுசாமி மனைவி ஹேமலதா (25) கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல்நிலை கருதி இங்க்பேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அத்துமீறி நுழைந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குழந்தையுடன் இருந்த ஹேமலதாவிடம் சென்று, தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
குழந்தையின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்துள்ளார். ஏன்? குழந்தை வெற்று உடம்புடன் உள்ளது, ஆடை எடுத்து வருமாறு கூறி குழந்தையை வாங்கிக் கொண்டுள்ளார். குழந்தைக்கு ஆடை எடுத்துக்கொண்டு ஹேமலதா திரும்ப வந்த போது, குழந்தையும், சம்மந்தப்பட்ட பெண்ணும் மாயமாகியிருப்பது கண்டு தாய் திடுக்கிட்டார். அழுது, புலம்பியபடி மருத்துவமனையின் பல இடங்களில் தேடினார். அப்போது மருத்துவர் எனக்கூறிய பெண் பக்கத்து வார்டில் குழந்தையுடன் நின்றிருந்தார். அவரிடம் சென்ற ஹேமலதா, என் குழந்தையை என்னிடம் கொடு எனக் கேட்டுள்ளார். அதற்கு உன் குழந்தை அழகாக உள்ளது. எனக்கு இந்த குழந்தை வேண்டும், இதற்காக உனக்கு ரூ.5 லட்சம் தருகிறேன்.
உன் கணவரிடம் கேட்டுச் சொல் எனக் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஹேமலதா, தனது குழந்தையை அவரிடமிருந்து வாங்க முயன்றார். அப்போது அவரை தள்ளிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பெண்ணிடம் இருந்த குழந்தையை வாங்கி, ஹேமலதாவிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை திருட முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை திருட முயன்ற பெண் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் உறவினர் எனவும், செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருகே ஈயகுணம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கோட்டீஸ்வரி (22) என்பதும் தெரியவந்தது.
விசாரணையின் போது, சம்மந்தப்பட்ட பெண், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் என்னை கைது செய்தால், சேலையை பிடித்து இழுத்ததாக ஈவ் டீசிங் கேஸ் கொடுப்பேன் என போலீசாரை மிரட்டினார். பின்னர் அங்கு வந்த டாக்டர்கள் கோட்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாக கூறி அவரை அவசரமாக அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணைக்கு அனுப்ப மறுத்து சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை திருட வந்த பெண் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.