*போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் மண்ணெண்ெணய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கொத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வசந்தி (36). இவர் தனது 2 மகன்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனு அளிக்க வந்தார்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லாமல் அலுவலகம் முன்பு வசந்தி தான் மறைத்து எடுத்து வந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை திடீரென எடுத்து தனது உடலில்ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலீசாரிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்த வையாபுரி மகன் சங்கர் என்பவரை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டு தனக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்துக்கொண்டு என்னையும், எனது மகன்களையும் கவனிக்காமல் எங்களை துன்புறுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி என்னையும், எனது மகன்களையும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ய முயற்சித்தனர். இதையடுத்து நாங்கள் உயிர் பிழைக்க எனது தாய் வீட்டுக்கு சென்று அங்கு தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறேன்.
மாமனாருக்கு சொந்தமாக கொங்கராயபாளையத்தில் வீடு, 2 ஏக்கர் நிலம் உள்ளது. எனது மகன்களின் பராமரிப்புக்காக எதையும் கொடுக்காமல் எங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மேலும், கொங்கராயபாளையத்தில் உள்ள வீட்டில் நானும், எனது மகன்களும் குடியிருக்க அனுமதிக்க வேண்டும். மேலும் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னையால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.