*திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கோரிக்கை மனுக்களை டிஆர்ஓ பெற்று விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் நேற்று நடந்தது, அதில், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 528 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுத்துறை அலுவலர்களுக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார்.
மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வு காணப்பட்ட மனுக்களின் விபரம் குறித்து ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்களுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்துச்சென்று, தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தவுலத்பீ என்பது தெரியவந்தது. அதே பகுதியில் சுகாதார ஊக்குநராக பணிபுரிந்ததாகவும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, தீக்குளிக்க முயற்சிப்பது சட்டவிரோத செயல் என அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மேலும், தண்டராம்பட்டு அடுத்த வானாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர்.வழக்கம் போல, குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.