மதுரை: நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை பொன்.மாணிக்கவேல் மிரட்டுகிறார் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியை தப்ப வைக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தேன். எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைதொடர்ந்து விசாரணை நடத்திய சிபிஐ, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மீதான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐயின் முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
இதில், முதல் தகவல் அறிக்கையை தவிர்த்து பிற ஆவணங்களை வழங்க முடியாது என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து சிபிஐயின் முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.சீனிவாசன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. விசாரணையில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள சுபாஷ் என்பவரை காப்பாற்றும் நோக்கில் பொன்.மாணிக்கவேல் செயல்பட்டதனால் தான் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொன்.மாணிக்கவேல் தனக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை மீறி தற்போது சாட்சிகளை மிரட்டி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அவரது முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை சிபிஐ தரப்பில் எடுக்கப்பட உள்ளது. பொன். மாணிக்கவேல் கேட்கும் விசாரணை அறிக்கையை வழங்க முடியாது. இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்தீர்கள் என்றார். அப்போது சிபிஐ தரப்பில், வழக்கின் விசாரணை தொடர்பான ஆவணங்கள் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நீதிபதி, மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.