புதுடெல்லி: வரும் 21ம் தேதி தொடங்கி 21 நாட்கள் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அலுவல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெற குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தனித் தனியே அலுவலக நாட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.
அதன்படி ஜூலை 21ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடர் 21 அமர்வுகளாக ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளும் செயல்படாது என அதிகாரப்பூர்வ அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வு நாட்கள் இருக்கும் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் முக்கியமான சட்டமசோதாக்கள், பட்ஜெட் விவாதங்கள் மற்றும் பிற அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர், 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான அமர்வாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தொடரில் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளை எழுப்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.