சென்னை: விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகள் காலை 11 மணி முதல் முடங்கின. விமான பயணச்சீட்டு பதிவு, இணையசேவை, விமான இயக்கம் தாமதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.சர்வர் பிரச்னையால் சென்னையில் 27 விமானங்கள் தாமதம் என்று விமான நிறுனங்கள் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் பயணிகளுக்கு கைகளால் போர்டிங் பாஸ் எழுதித்தரப்படுக்கிறது. கணினிகள் சரிவர இயங்காததால் விமான நிறுவனங்கள் கவுன்ட்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். போர்டிங் பாஸ்களை பயணிகளுக்கு கைகளால் எழுதிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர் குழு ஈடுபட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மென்பொருள் கோளாறால் விமான நிலையத்தில் பயணிகள் சிரமம் அடைந்தனர். சென்னையில் மாலை 6 மணிக்கு பிறகு புறப்பட வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இணைய கோளாறு சரி செய்யப்பட்டவுடன் வழக்கம்போல் முழு அளவில் விமான சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.