நெல்லை: அக்னி நட்சத்திரம் முடியும் முன்னரே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திர காலமான கத்தரி வெயில் தாக்கம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு கோடையில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெப்பம் பதிவானது. நாளையுடன் (28ம் தேதி) அக்னி நட்சத்திர தாக்கம் நிறைவடைய உள்ளது. ஆனால் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் முடிவதற்கு 5 தினங்களுக்கு முன்னதாகவே இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தொடங்கியது.
இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக மழை மட்டுமின்றி காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. நடப்பு கோடையில் தமிழகத்தில் ஒரு நாள் அதிகபட்ச மின் நுகர்வு 18 ஆயிரம் மெகாவாட் வரை உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக தென் மேற்கு பருவகாற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரத்து 253 மெகாவாட்டாக உயர்ந்தது. காற்று மற்றும் மழை காரணமாக மின் நுகர்வும் தமிழகத்தில் குறைந்துள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆனால் நேற்று 13 ஆயிரத்து 905 மெகாவாட்டாக குறைந்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை நேற்று காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 200 மெகாவாட்டை கடந்தது மே மாதத்தில் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இன்றும் பலமாக காற்று வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.