நெல்லை: தமிழகத்தில் அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கு அடுத்தப்படியாக காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சோலார் மின் உற்பத்தி அதிக பங்கு வகிக்கிறது. சீசன் நேரங்களில் மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி கை கொடுக்கிறது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன.
தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்கியது முதல் காற்றாலையில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. கடந்த 2 வாரங்களாக காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் உச்சம் பெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி சராசரி காற்றாலை மின் உற்பத்தி 3,083 மெகாவாட்டாக இருந்தது. நேற்று முன்தினம் 4,030 மெகாவாட்டாகவும், நேற்று 4,150 மெகாவாட்டாகவும் உயர்ந்தது.
நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகமாக உள்ளதால் தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.