லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், ஜாக் டிரேப்பர் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38), பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லர் (28) உடன் மோதினார். முதல் செட்டை ஜோகோவிச் எளிதில் வென்றபோதும், 2வது செட்டில் கடும் சவால் எழுப்பிய முல்லர் வெற்றி பெற்றார். இருப்பினும் அதன் பின் சுதாரித்து ஆடிய ஜோகோவிச் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றினார். அதனால், 6-1, 6-7 (7-9), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
டிரேப்பர் வேகம் பெயஸ் சோகம்;
மற்றொரு போட்டியில் பிரிட்டன் வீரர் ஜாக் டிரேப்பர், அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் பெயஸ் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய டிரேப்பர், 6-2, 6-2 என முதல் 2 செட்களை எளிதில் வசப்படுத்தினார். 3வது செட் ஆட்டத்தின்போது பெயஸ் காயமடைந்து வெளியேறினார். அதனால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட டிரேப்பர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் காஃப் அதிர்ச்சி தோல்வி;
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப், உக்ரைனை சேர்ந்த, உலகின் 42ம் நிலை வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய டயானா, 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட் கணக்கில் காஃப்பை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றி மூலம் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.