*கூக்கல்தொரை சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி
கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. மலைக்காய்கறிகளான முட்டைகோஸ், கேரட், புரூக்கோளி, மலைப்பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் பிராதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனி, நீர் பனியின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாமல் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், சிற்றோடைகள் அனைத்திலும் நீர் வரத்து குறைந்தது காணப்பட்டது.
இந்நிலையில் கூக்கல்தொரை பகுதியில் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து குறைந்தது காணப்பட்ட நிலையில், கூக்கல்தொரை பகுதியில் விவசாயத்திற்கு போதிய நீர் கிடைக்கப் பெறாமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகினர்.
மேலும் கடந்த வாரங்களில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் உயிலட்டி நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கூக்கல்தொரை அதனை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் பிராதான தொழிலாக செய்யப்பட்டு வரும் மலைக்காய்கறிகள் விவசாயத்திற்கு ஏற்ற தண்ணீர் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.