கவுன்சில் பிளப்ஸ்: யுஎஸ் ஓபன் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கவுன்சில் பிளப்ஸ் நகரில் யுஎஸ் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி ஒன்றில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி (20), தைவான் வீரர் சோ டியென் சென் (35) மோதினர். அனுபவ வீரரான சென், முதல் செட்டை போராடி கைப்பற்றினார். ஆனால், இளமைத் துடிப்புடன் ஆடிய ஆயுஷ் 2வது செட்டை வசப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டையும் ஆயுஷ் கைப்பற்றினார். அதனால், 21-23, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வென்ற ஆயுஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில், கனடா வீரர் பிரையன் யாங் (23), தைவான் வீரர் ஜெ.லியாவோவை, 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து, ஆயுஷ் ஷெட்டி, யாங் இடையே, இன்று இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. தவிர, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தான்வி சர்மா (16), சீனாவில் பிறந்து அமெரிக்காவுக்காக ஆடி வரும் பெய்வென் ஜாங் (34) மோதுகின்றனர்.