நாகர்கோவில்: நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து இயங்கம் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள இரட்டை இருப்பு பாதை பணிகள் முடிவுபெற்று ரயில்கள் எந்த ஒரு ரயிலுக்கும் கிராசிங் வேண்டி நிற்காமல் வேகமாக இயங்கி வருகிறது. இந்த காரணத்தால் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மதுரை நோக்கி செல்கின்ற அனைத்து ரயில்களும் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு செல்கின்ற போது அதிக நேரம் மேலப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதே போல் மதுரையிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் வரும் போது அனைத்து ரயில்களும் அதிக நேரம் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு திருவனந்தபுரம் கோட்டத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மதுரை மற்றும் திருவனந்தபுரம் கோட்டம் இடையே ரயில்கள் ஒப்படைப்பின் போது கூடுதல் நேரம் மறைமுகமாக கால அட்டவணையில் சேர்க்கப்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அதிகளவில் அதிக நேரம் ரயில்கள் வைக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் சில ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பயணிகள் சங்கத்தினர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
* கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் 12634 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை அதிகப்படுத்தி கால அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் தற்போது இயங்கும் மாலை 6 மணிக்கு கால அட்டவணையிலிருந்து மாற்றம் செய்து மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் படிபடியாக இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியில் சூர்ய மறைவை பார்த்துவிட்டு சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் பயணிக்கும் வகையில் இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இரவு 7:30 பிறகு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – பெங்களூரு ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி காலஅட்டவணையை பெங்களூருக்கு காலை 7:00 மணிக்கு செல்லுமாறு கால அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டும். இதைப்போல் இந்த ரயில் பெங்களுரிலிருந்து மாலை 6:30 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர ரயிலின் கால அட்டவணையை கன்னியாகுமரியிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – மும்பை வாரத்துக்கு ஐந்து நாட்கள் செல்லும் ரயிலை சூப்பர் பாஸ்டு ரயிலாக மாற்றம் செய்து நாகர்கோவிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்தும் இதைப்போல் மறுமார்க்கம் இரவு 10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு இயக்க வேண்டும்.
* கொச்சுவேலி – நாகர்கோவில் பயணிகள் ரயில் காலையில் நாகர்கோவில் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதைப்போல் நாகர்கோவிலிருந்து கொச்சுவேலி செல்லும் ரயிலும் காலதாமதமாக இயங்குவதாக பல்வேறு புகார் உள்ளது. எனவே இந்த இரண்டு ரயில்களின் காலஅட்டவணையை மாற்றம் செய்து காலதாமதத்தை தவிர்த்து சரியான நேரத்துக்கு இயக்க வேண்டும்.
* இருவழிபாதை பணிகள் முடிந்த நிலையில் கன்னியாகுமரி நிசாமுதீன் திருக்குறள் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி கன்னியாகுமரியிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயிலின் காலஅட்டவணையை தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரத்தை மாற்றம் செய்து இரவு 10:30 மணிக்கு புறப்பட செய்து வேகத்தை அதிகப்படுத்தி காலை 10. 30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருமாறு இயக்க வேண்டும். கன்னியாகுமரி – தாம்பரம் என இதை மாற்றம் செய்ய வேண்டும்.
* நாகர்கோவிலிருந்து ஞாயிற்றுகிழமை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து இரவு 7:30 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்கி நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். இந்த ரயிலை மறுமார்க்கம் தாம்பரத்திலிருந்து மதியம் 12:30க்கு புறப்படுமாறு இயக்க வேண்டும்.
* மதுரை புனலூர் மற்றும் சென்னை – குருவாயூர் ஆகிய இரண்டு ரயில்களும் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படுகின்றது. ஆகவே இந்த இரண்டு ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி சென்னையிலிருந்து குருவாயூர் மார்க்கம் பயணிக்கும் போது நாகர்கோவில் டவுனுக்கு இரவு 8:30 மணிக்கு வருமாறு காலஅட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
* நாகர்கோவில் – கோவை இரவு நேர சூப்பர்பாஸ்டு ரயில் வேகத்தை அதிகப்படுத்தி நாகர்கோவிலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 6:00 மணிக்கு செல்லுமாறும் மறுமார்க்கம் கோவையில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டு காலை 6:00 மணிக்கு நாகர்கோவில் வருமாறும் மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்ட பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
* கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஜெபால்பூர்க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கப்பட்ட நிலையில் இந்த சிறப்பு ரயில் மதுரையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும்.
* கொச்சுவேலி நிலாம்பூர் ரயில் கொச்சுவேலி நாகர்கோவில் பயணிகள் ரயிலாக பராமரிப்புக்காக வேண்டி நாகர்கோவில் கொண்டுவருவதை நிறுத்த வேண்டும். இந்த கொச்சுவேலி நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.