ஈரோடு: ஈரோடு நசியனூர் சாலையில் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு அம்சங்களுடன் சாலையை விரிவுப்படுத்திட பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகரில் முக்கிய சாலையாக பெருந்துறை சாலைக்கு அடுத்த படியாக நசியனூர் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் உள்ளன. இதனால், நசியனூர் சாலையில் 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கும். நசியனூர் சாலை வழியாக தான் காஞ்சிக்கோவில், திங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்ல ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த, சாலையில் தான் சம்பத் நகர் பிரிவு, நாராயணவலசு, வெட்டுக்காட்டு வலசு, வில்லரசம்பட்டி போன்ற ஏராளமான சந்திப்புகள் உள்ளன. ஈரோட்டில் இருந்து நசியனூர் வரை செல்லும் சாலை இருவழிச்சாலையாக குறுகலாக இருப்பதாலும் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நசியனூர் சாலையில் இருவழிச்சாலையை அடையாளப்படுத்தும் சென்டர் மீடியன் (தடுப்பு சுவர்), போதிய வேகத்தடைகள், எச்சரிக்கை பதாகைகள் போன்ற சாலை பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. சென்டர் மீடியன் இல்லாததால் இந்த சாலையில் முன்னே செல்லும் வாகனங்களை, வாகன ஓட்டிகள் முந்தி செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், பலர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துக்களையும், போக்குவரத்து நெரிசலையும் தடுக்க நசியனூர் சாலையை விரிவுப்படுத்தி தரம் உயர்த்த வேண்டும். மேலும், சாலை பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து சாலையின் நடுவே சென்டர் மீடியன், தேவையான இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள், எச்சரிகை பதாகைகள் போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நசியனூர் சாலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘நசியனூர் சாலை கடந்த 10 ஆண்டுகளில் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது.
இச்சாலையில் இருபுறமும் எண்ணற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் இருப்பதால் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இருவழிச்சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போதைய சூழலில் நசியனூர் சாலையை பாதுகாப்பு அம்சங்களுடன் விரிவுப்படுத்திட மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.