நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்குள் கடந்த ஒரு ஆண்டாக வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் கூட்டம் அதிகம் உள்ள பஸ்களை குறி வைத்து பயணம் செய்கின்றனர். அப்போது பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகை, பேக்கில் இருக்கும் பணம் ஆகியவற்றை லாவகமாக திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக செட்டிக்குளம் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம், செட்டிக்குளம் சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு, கோட்டாறு முதல் இடலாக்குடி, அண்ணா பஸ் நிலையம் முதல் வடசேரி பஸ்நிலையம் ஆகியவற்றுக்கு இடையே தான் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏழை, நடுத்தர குடும்ப பெண்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்று திருட்டில் ஈடுபடும் கும்பலை பெண் போலீசார் சாதா உடையில் கண்காணிக்க வேண்டும்.
திருட்டில் ஈடுபடுகின்றவர்களை பிடித்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அண்ணா பஸ் நிலையம், கோட்டாறு காவல் நிலைய எல்கையில் வருகிறது. மாதம் 40 சம்பவங்களாவது இங்கு புகார்களாக பதிவாகின்றன. ஆனால், கோட்டாறு காவல் நிலையத்தில், தற்போது 17 போலீசார் மட்டுமே காவல் நிலைய பணியில் உள்ளனர். மற்றவர்கள், துறைசார்ந்த இதர பணிகளில் உள்ளனர். கோட்டாறு காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு சார்ந்த அதிக வழக்குகள் வரும் நிலையம் என்பதால், நகை திருட்டு வழக்குகளை கையாள இயலாத சூழல் உள்ளது. அதிக வழக்குகள் காரணமாக உயர் அதிகாரிகள் வாட்டி வதைப்பதாக கூறப்படுகிறது. ஆகவே இங்கு நகை திருட்டு புகார்கள் வந்தால், நீங்கள் நகையை காணவில்லை என்று தெரிந்த இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் தான் புகார் தர வேண்டும் எனக்கூறி, நகையை பறிகொடுத்தவர்களை தங்களது வசிப்பிட பகுதி காவல் நிலையத்திற்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
வசிப்பிட பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றால், நீங்கள் நகையை பறிகொடுத்த இடத்தில் தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர். இப்படியாக பொதுமக்களை போலீசார் அலைழிக்கின்றனர். கடந்த 28ம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்ற 3 நகை திருட்டு சம்பவங்கள் மற்றும் ஒரு செல்போன் திருட்டு சம்பவத்தில், தென்தாமரைகுளம், பூதப்பாண்டி, வடசேரி காவல் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். ஆனால், வடசேரியில் புகார்களை பெற மறுத்து விட்டனர். இதையடுத்து எஸ்.பி அலுவலகத்தில் கல்லூரி மாணவி தரப்பில் புகார் அளித்தனர். இதனையடுத்து, நேற்று காலை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர். கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற நகை திருட்டு கும்பைல பிடிக்க எஸ்.பி தனிப்படை அமைப்பதுடன், புகார்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே நாகர்கோவிலில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு காமிராக்கள் பஸ் நிலையங்கள், முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த காமிராக்கள் பல செயல்படாமல் உள்ளன. ஆவே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அவற்றை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவியை மிரட்டிய பெண் போலீஸ்
28ம் தேதி நகையை பறிகொடுத்த கல்லூரி மாணவி தனது பெற்றோருடன், கோட்டாறு காவல் நிலையம் வந்திருந்தார். அப்போது, அவரிடம், பெற்றோர் கண் முன்பே, யாரிடமாவது நகையை கொடுத்து இருப்பாய், உண்மையை சொல் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மாணவியும், அவரது பெற்றோரும் மனவேதனையடைந்தனர். இதுபற்றி கோட்டாறு போலீசாரிடம் கேட்டபோது, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பட்டபகலில் இளம்பெண்ணிடம் வாலிபர் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்தாக புகார் கூறினார். ஆனால், சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியில் இதுபோன்ற சம்பவம் இல்லை. பின்னர் விசாரித்த போது, இளம் பெண் தனது காதலனுடன், தேவசகாயம் மவுண்ட் சென்ற போது, செயினை காதலனிடம் கழட்டி தந்தது தெரிய வந்தது. இதனால், இவ்வாறு கேட்டிருக்கலாம். அதற்காக அனைவரையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்றனர்.