சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. எனினும் 10வது இடத்தில் இருந்து தப்பிக்க சிஎஸ்கேவுக்கு கடைசியாக ஒரு சிறு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தனது கடைசி போட்டியில் சாத்தியமே இல்லாத பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே 9வது இடத்துக்கு அந்த அணியால் முன்னேற முடியும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளைப் பெறும். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முந்தி 9வது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், சிஎஸ்கேவுக்கு நெட் ரன் ரேட் அதிகமாக இருக்க வேண்டும்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் ரன் ரேட் -0.549 ஆக உள்ளது. சிஎஸ்கே நெட் ரன் ரேட் -1.030 ஆக உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்த வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 7.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும். நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி எந்தப் போட்டியிலும் இதுபோன்ற அசாத்தியமான வெற்றிகளைப் பெறவில்லை.
எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோ அல்லது வெற்றி இலக்கை 7.4 ஓவர்களில் எட்டுவதோ நடக்காது என்றே கருத வேண்டி உள்ளது. ஒருவேளை மேற்கூறியது நடக்கவில்லை என்றால், 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 10வது இடத்தில் தான் இருக்கும்.