மதுரை: தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகளை தடை விதிக்க கோரிய மனுவிற்கு அரசு செயலர்கள் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு என சாதியக்கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சியினருடன் இணைத்துக் கொள்வது, இளைஞர்கள் யூடியூப் சேனல்களில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி பொது அமைதியை குலைக்கும் வகையில் சாதிய வெறுப்பு பேச்சுக்களை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, எஸ்சி-எஸ்டி பாதுகாப்பு குழு முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும், வெறுப்புணர்வை தூண்டும் அனைத்து சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்குமாறும், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத மற்றும் போட்டியிடாத சாதிய கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து சாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் மனுவிற்கு தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர், ஆதிதிராவிட நலத்துறை செயலர், டிஜிபி, பதிவுத்துறை தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.