தவிக்கும் நிறுவனங்கள் குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக ஃபேம் திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு வரை இந்த திட்டத்துக்காக ரூ.895 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் ஃபேம் – 2 திட்டம் கடந்த நிதியாண்டு இறுதியான மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் ஆண்டில் ஜூலை 31ம் தேதி வரை இஎம்பிஎஸ் (எலக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டம் – 2024) என்ற திட்டத்தை ஒன்றிய அரசு புதிதாக அறிமுகம் செய்தது. இதன்பிறகு, இதற்கு மாற்றாக மீண்டும் ஃபேம்-3 திட்டம் கொண்டுவரப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த அறிவிப்பும் ஒன்றிய பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எலக்ட்ரிக் வாகன மானிய திட்டம் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஃபேம் – 3 திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, கனரக தொழிற்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் எப்போது செயல்படுத்தப்படும் என்ற உறுதியான அறிவிப்பு வராதது, மின் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இனியும் தாமதம் ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மின் வாகன மானிய திட்டத்தில் சேர தகுதியானவைதானா என ஆய்வு நடத்தி, பரிசோதனைகள் செய்து அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு 2 மாதங்கள் வரை ஆகிவிடும். இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் குழப்பமும், தவிப்பும் அடைந்துள்ளனர்.