Tuesday, February 27, 2024
Home » மாவட்டத்தில் தொழில் வளம் அதிகரிக்கப்படுமா?

மாவட்டத்தில் தொழில் வளம் அதிகரிக்கப்படுமா?

by Lakshmipathi

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் வளங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கிராபைட் கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது.

தொழிற்சாலை தொடங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்க திட்டமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. தொடக்க நிலையில் இருந்ததுபோல் தற்போதும் 200பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். மத்திய அரசுக்கு சொந்தமான காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சில மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்கள் சுமார் 600பேர் வரை பணிபுரிகின்றனர்.

காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் கடந்த 4ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இவைகள் தவிர அரசு நிறுவனங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் 10மில்கள் உள்ளன. மானாமதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில் சிறிய அளவிலான சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு தனியார் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றனர். இதிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இல்லை.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் வேலைவாய்ப்பு உருவாகும் என கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. 30ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில், எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதே நிலையிலேயே தற்போதும் உள்ளது. அரசு சார்பில் கூடுதல் சிப்காட்டுகள், தொழிற்சாலைகள், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் பல ஆண்டுகளாக இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்க்கின்றனர். இதனால் பெரும்பாலானோர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலேயே வேலை பார்த்து வருகின்றனர். சென்ட்ரிங், கொத்தனார், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்களாகவும், ஹோட்டல் தொழிலாளர்களாகவுமே அதிகப்படியானோர் செல்கின்றனர்.

இளைஞர்கள் சிலர் கூறியதாவது: விவசாய தொழிலும் குறைந்து வருவதால், விவசாய தொழில் தெரிந்தவர்கள் இன்று எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கக் கூடிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட மாவட்டங்களியே தொடங்கப்படுகிறது. சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு அவற்றை பரிந்துரை செய்யலாம். காலம், காலமாக வெளி நாடுகள், வெளி மாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் நிலையை மாற்ற தொழில் வளத்தை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

You may also like

Leave a Comment

12 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi