நன்றி குங்குமம் டாக்டர்
தலைமை ரேடியாலஜிஸ்ட் ஆர்த்தி கோவிந்தராஜன்
எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே ஆகியவற்றில் கர்ப்பிணி தாய்மார்கள் கவனிக்கவேண்டியவை குறித்து விவரிக்கிறார் டாக்டர் ஆர்த்தி கோவிந்தராஜன் எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி., இ.டி.ஆர். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுடைய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக நினைவில் நிற்கலாம். மிகவும் பிடித்த உணவு வகைகளிலும் கூட எதை உண்பது, எதை தவிர்ப்பது என்பது முதல் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக இருக்க வேண்டுமென்ற கவனத்தோடு தூங்கும் முறைகள் வரை, ஒவ்வொரு விஷயத்திலும் கர்ப்பிணித் தாய்மார்கள் இயற்கையாகவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த எச்சரிக்கையும், அக்கறையும் மிக மிகச் சரியானவை என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது வயிற்றில் இருக்கும் கருவுக்கும் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் எடுப்பதில் உடனுடக்குடன் முடிவானது, கதிர்வீச்சு தொடர்புடைய மெடிக்கல் இமேஜிங்கை எடுப்பதில் அவ்வளவு சுலபமாக, பதட்டமில்லாமல் எடுக்கப்படுவதில்லை.
ஒரே காரணம், எக்ஸ்-ரேக்கள், சிடி ஸ்கேன், பற்களுக்கான டென்டல் இமேஜிங் போன்றவற்றில் கதிர்வீச்சு இருக்குமோ அது நம்மைப் பாதிக்குமோ என்கிற பதட்டம்தான். உண்மையில் இந்த பதட்டம் தேவையா இல்லையா என்றும், கர்ப்ப காலத்தில் இந்த பரிசோதனைகள் உண்மையில் எந்தளவிற்கு ஆபத்தானவை என்பது குறித்தும், இவை மீதான கட்டுக்கதைகள் என்ன என்பதையும் இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
“நான் கண்டிப்பாக இந்த ஸ்கேன் எடுக்க வேண்டுமா?”
பல கர்ப்பிணித் தாய்மார்கள் கலக்கத்துடன் கேட்கும் கேள்வி, ‘நான் ஸ்கேன் எடுத்தே ஆகணுமா? குறிப்பாக ஸ்கேன் என்று வரும்போது கூடவே தயக்கமும் வரக்காரணம், ரேடியேஷன் குறித்த பயம். ஸ்கேன் எடுக்கும்போது கதிர்வீச்சு பாதிப்பு இருக்குமா இருக்காதா என்பது குறித்து அறிவியல் பூர்வமாக நான் உங்களுக்கு விளக்குகிறேன். இனி உங்களுக்கு ஸ்கேன் பற்றிய பயம் தேவை இல்லை.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் [Ultrasound Scan] என்பது என்ன?
கர்ப்ப காலத்தில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் இமேஜிங் முறைதான் அல்ட்ராசவுண்ட். இம்முறையில் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. [கதிர்வீச்சு எதுவும் இம்முறையில் இல்லை]. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை, நஞ்சுக்கொடி மற்றும் கருப்பையின் நேரடி படங்களை உருவாக்க, இந்த இமேஜிங் முறையில் ஒலி அலைகளை பயன்படுத்துகிறோம். கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குழந்தை குறித்த தகவல்களை அறிய இம்முறை முற்றிலும் பாதுகாப்பானது. வழக்கமான மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள் [routine prenatal checkups], கரு வளர்ச்சி கண்காணிப்பு [fetal growth tracking] மற்றும் ஆரம்பகால ஒழுங்கின்மை கண்டறிதல் [early anomaly detection] உள்ளிட்ட இவையனைத்திற்கும் கூட இதுவே அதிகம் விருப்பப்படும் முறையாகும்.
இம்முறையில் உடலில் அறுவைசிகிச்சை கத்திகளுக்கு வேலை இல்லாமல், எந்தவிதமான வடுக்களும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதால், கருவுக்கும், தாய்க்கும் எந்தவிதமான அபாயங்களும் இல்லாத முறையாக இருந்து வருகிறது. இதனாலேயே, கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ப்ரக்னன்சி இமேஜிங்கில் [pregnancy imaging] இது கோல்ட் ஸ்டாண்டர்ட் பரிசோதனை முறையாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan (Magnetic Resonance Imaging)) எப்படி எடுக்கப்படுகிறது?
உடல் உறுப்புகள் மற்றும் மென்மையான திசுக்களின் முழுமையான விவரங்களுடன் படங்களை உருவாக்க எம்.ஆர்.ஐ முறையானது காந்தத்தன்மையைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, இது கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. இதனால் கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்படுவாதால் பாதுகாப்பான முறையாக பார்க்கப்படுகிறது. தாயின் மூளை, முதுகெலும்பு அல்லது இடுப்பு ஆகிய உடல் பகுதிகளில் இருக்கும் அசாதாரண நிலைமைகளைப் பற்றி அல்ட்ராசவுண்ட் மூலம் போதுமான தகவல்களை பெறமுடியாதபோது, மருத்துவர்களால் எம்.ஆர்.ஐ பரிந்துரைக்கப்படலாம்.
ஆரம்பகால கர்ப்பத்தின் போது எம்.ஆர்.ஐ. முறையை மேற்கொள்ளும் போது அதன் பாதுகாப்பு குறித்து முழுமையாக உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும், தீங்கு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் கட்டாயமாக தேவைப்படும்போது, எம்.ஆர்.ஐ. முறையானது நோய் மற்றும் பாதிப்புகளைக் கண்டறியும் ஒரு முக்கியமான பரிசோதனை முறையாக இருந்து வருகிறது.
எக்ஸ்-ரே [X-ray]-ல் கதிர்வீச்சு இருக்குமா?
நம்முடைய எலும்புகள் மற்றும் நம் உடலினுள் இருக்கும் உள்பகுதிகளின் ஒரு சில கட்டமைப்புகளின் படங்களைப் பிடிக்க, எக்ஸ்-ரே முறையில் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சு பயன்படுத்தபடுகிறது. கர்ப்ப காலத்தில், எக்ஸ்-ரேக்கள், குறிப்பாக பல் அல்லது மார்பு பகுதிகளுக்காக எடுக்கப்படுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால் வயிற்றுப் பகுதியைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரம், கர்ப்பிணித் தாய்மார்கள் வயிற்றுப் பகுதியை பாதுகாக்கும் ஒரு முறையான கவசம் [லெட் எப்ரான் – lead apron] அணிந்து எக்ஸ்-ரே எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அதுவும் மருத்துவ ரீதியாக கண்டிப்பாக தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கப்படவேண்டும்.
அதேபோல், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே எடுக்கலாம். ஒரு எக்ஸ்-ரே எடுக்கும் போது (மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்) அதிலிருந்து வரும் கதிர்வீச்சின் அளவு மிகக் குறைவு. மேலும் அது பெரும்பாலும் தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், மருத்துவ ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, நீங்கள் உங்களுடைய கர்ப்பம் குறித்து மருத்துவ நிறுவனத்திடமோ அல்லது டயக்னோஸ்டிக் மையத்திடமோ தகவல் தெரிவிக்கவேண்டியது மிக மிக முக்கியமாகும்.
சிடி ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி – CT Scan (Computed Tomography) பாதுகாப்பானதா? எப்போது. எப்படி எடுக்கலாம்?
சிடி ஸ்கேன்கள், நம்முடைய உடலின் முப்பரிமாண படங்களை அதாவது 3D படங்களை உருவாக்க வெவ்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேக்களின் தொடர்சியான இமேஜிங்களை உள்ளடக்கியது. இவை நாம் வழக்கமாக எடுக்கும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்-ரேக்களை விட அதிக அளவு கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன. கர்ப்பக் காலத்தில் தாயின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏதேனும் இருந்தால், அதைக் கண்டறிவதற்கு ஸ்கேனை தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் மட்டுமே எடுக்கப்படலாம். இல்லையென்றால், இம்முறை தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. சிடி ஸ்கேன் முறை பயன்படுத்தப்படும்போது, ஸ்கேன் செய்யப்படும் பகுதிக்குள் கரு இருக்கும் பகுதி இடம்பெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
கரு இருக்கும் பகுதியை மறைக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக வயிறு அல்லது இடுப்புப் பகுதியை ஸ்கேன் செய்வதைத் தவிர்ப்பது மற்றும் லெட் ஷீல்ட்டை பயன்படுத்துவது போன்றவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அக்கறையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. சிடி ஸ்கேன்கள், நோயறிதல் முறைகளில் மிகவும் ஒரு சக்திவாய்ந்த முறையாக இருந்துவருகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில், சிடி ஸ்கேன் எடுப்பதால் உண்டாக வாய்ப்புகளுள் அபாயங்களை விட பலன்கள் மிக அதிகமாக இருக்கும்போது மட்டுமே
பரிந்துரைக்கப்படுகின்றன.
‘‘நான் ஸ்கேன் எடுத்தே ஆகவேண்டுமா… என்று நான் மருத்துவரிடம் கேட்க முடியுமா?”
ஆமாம், உங்கள் மருத்துவரிடம் கேட்க உங்களுக்கு முழு உரிமை உண்டு:
*இந்த ஸ்கேன் அவசியமா?
*கர்ப்ப காலத்தில் இந்த ஸ்கேன் எடுப்பது பாதுகாப்பானதா?
*ஸ்கேனுக்கு பதிலாக வேறு ஏதேனும் பாதுகாப்பான முறை இருக்கிறதா?
மருத்துவர்களின் பதில் ஸ்கேன் தேவைப்படுவதை பற்றியதாக இருந்தால், உங்களின் பாதுகாப்பு, நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அக்கறை மற்றும் மலிவு கட்டணத்தில் நிறைவான சேவை ஆகிய மூன்று அம்சங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் சென்டர்களை நம்பி ஸ்கேன் எடுக்கலாம். முக்கியமாக உங்களுடைய மருத்துவரை நம்புங்கள்.
எளிதில் புரிந்து கொள்ள உதவும் அட்டவணை: கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் இமேஜிங் முறைகளும், அவற்றின் பாதுகாப்பு நிலைகளும்
ஸ்கேன் வகை கதிர்வீச்சு இருக்கிறதா? கர்ப்பமாக இருக்கும் போது பாதுகாப்பானதா? முக்கிய குறிப்புகள்
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன். இல்லை ஆமாம் கருவின் வளர்ச்சி மற்றும் அடுத்தடுத்த வளர்ச்சியைக் காண சிறந்த வழி
எம்ஆர்ஐ ஸ்கேன் இல்லை ஆமாம் அவசரம் இல்லாவிட்டால் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவிர்க்கவும்.
எக்ஸ்ரே அல்லது பற்களுக்கான எக்ஸ்ரே, ஆமாம் மருத்துவ ரீதியாக நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கலாம். எப்போதும் கதிரியக்க நிபுணரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும். வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக ஈயக் கவசத்தைப் [lead shield] பயன்படுத்தவும். சிடி ஸ்கேன். ஆமாம். எச்சரிக்கை அவசியம் தாய்க்கு உயிருக்கு ஆபத்தான நிலைமைகளில் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே எடுக்கலாம். வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பாதுகாப்பிற்காக ஈயக் கவசத்தைப் பயன்படுத்தவும் and pelvis.
கர்ப்பமாக இருப்பது நம்முடைய மகிழ்ச்சியையும், அன்பையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் தருணங்களாக, கொண்டாட்டமாக இருக்க வேண்டும். மாறாக, ஸ்கேன்களால் உண்டாகும் மன அழுத்தத்திற்கான நேரமாக இருக்கக்கூடாது என்பது முக்கியம். அதனால் ஸ்கேன்கள் எடுப்பதன் நோக்கம், அவற்றின் அவசிய தன்மை குறித்த அவசியமான தகவல்களைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள். சந்தேகங்கள் இருந்தால் எந்தவித தயக்கமும் இல்லாமல், அவை குறித்த கேள்விகளைக் கேளுங்கள். மேலும் உங்களுடைய பாதுகாப்பையும், குழந்தையின் நலனையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் நம்பகமான நோயறியும் டயக்னோஸ்டிக் மையங்களை நம்புங்கள்.
‘உண்மையிலேயே உங்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது, அதற்கான அத்தியாவசியமான சூழல் இருக்கும் போது, கதீர்வீச்சு குறித்த பயம் உங்களுக்கான உதவியைப் பெறவிடாமல் தடுத்துவிடக்கூடாது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது.’