கொடைக்கானல்: காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாததால், உடல்நலம் பாதித்த பெண்ணை 10 நாட்கள் கழித்து ஊர் மக்கள் டோலி கட்டி சிகிச்சைக்கு தூக்கி சென்ற சம்பவம் கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் கடைக்கோடியில் சின்னூர், சின்னூர் காலனி, பெரியூர் மலைக்கிராமங்கள் உள்ளன. 200க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வழியாக காட்டுப்பாதையாக மூன்று ஆறுகளை கடந்துதான் இந்த கிராமங்களை அடைய முடியும். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆறுகள், சிற்றோடைகளில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வந்த இப்பகுதியை சேர்ந்த 3 பேர் கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இவர்கள் சுமார் 7 மணி நேரத்திற்கு பின் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (45) உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். காட்டாற்று வெள்ளம் காரணமாக அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஆற்றில் நேற்று தண்ணீர் அளவு குறைந்ததால் அப்பகுதி மக்கள் அவரை டோலி கட்டி காட்டுப்பாதை வழியாக 10 கிமீ தூக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் பெரியகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆற்றை கடக்க தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்.