கன்னியாகுமரி: சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் ராயபுரம் பகுதியை சேர்ந்த அசோக் (32). இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அசோக் தனது நண்பர்களான சென்னை ஊரப்பாக்கம் ராமாமிருதம்(32), வேலூர் சசிகுமார் (24), கணேஷ் (24) ஆகியோருடன் காரில் குமரி மாவட்டம் காளிகேசத்திற்கு நேற்று மதியம் சுற்றுலா வந்தார். பின்னர் 3 பேரும் காளிகேசம் ஆற்றில் இறங்கி குளித்தனர். பகல் 1.30 மணியளவில் மலை பகுதியில் பெய்த மழையால் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கிய அசோக்கை வெள்ளம் இழுத்து சென்றது. மற்றவர்கள் போராடி கரையேறினர். சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட அசோக்கை அப்பகுதியினர் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.