பாலக்காடு, நவ.15: பாலக்காடு முதலமடை அருகே தோட்டங்களிலும், வயல்களிலும் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.கேரள-தமிழக எல்லை பகுதியான கோவிந்தாபுரத்தை அடுத்த முதலமடை, கொல்லங்கோடு, எலவஞ்சேரி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் புகுந்து பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது. பரம்பிக்குளம் பகுதியிலிருந்து காட்டை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கோவிந்தாபுரம், முதலமடை, சுள்ளியாறு, எலவஞ்சேரி, நெல்லியாம்பதி, போத்துண்டி, நெம்மாரா ஆகிய பகுதிகளிலுள்ள அறுவடைக்கு தயாராகியுள்ள வயல்களையும், மாந்தோப்புகளிலும், வாழை, தென்னை, பாக்கு மர தோட்டங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து விளைச்சல் நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்கின்ற மாணவர்களும், அன்றாடம் கூலிக்கு வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டியவாறு உள்ளனர். இருப்பினும் யானைகள் மீண்டும் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி விளைச்சல் நிலங்களை துவம்சம் செய்து வருகிறது. இந்நிலையில், முதலமடை, கொல்லங்கோடு, எலவஞ்சேரி ஆகிய ஊராட்சி மலை அடிவார பகுதிகளில் மின்வேலிகள் அமைத்துத்தர வனத்துறையினர் முன் வர வேண்டும். அகழிகள் அமைக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.