வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கேரள வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும், வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, நீரார் அணை பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் நிற்பதால் வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில்,“தற்போது கேரள வனப்பகுதியிலிருந்து யானைகள் அதிகளவில் வால்பாறை பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் நடமாட்ட பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், தடை செய்யப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.