வால்பாறை : வால்பாறை பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. தேயிலை தோட்ட பகுதிகள், தேயிலை தோட்டங்களை ஒட்டிய வனங்கள் பசுமையாக மாறி விட்டன. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் இருக்கும் பகுதியில் வனப்பகுதிக்கு உள்ளிருந்து வரும் காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன் உலா வந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் காட்டெருமைகள் தேயிலை தோட்ட பகுதிகளுக்குள்ளேயே படுத்து ஒய்வெடுத்து வருகின்றன.இந்த சமயத்தில் தேயிலை தோட்டப்பகுதிக்கு தேயிலை இலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் செல்லும்போது தேயிலை செடிகளுக்கு மத்தியில் படுத்து ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் காட்டெருமைகள் திடீரென குதித்து எழுந்து ஒட முயற்சிக்கும் அப்போது தொழிலாளர்கள் பயந்து ஒடி கீழே விழுந்து விடுவதற்கும், காட்டெருமைகளிடம் சிக்கி தாக்குதலுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தோட்டத்தொழிலாளர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் நிர்வாகத்தினர் தேயிலைத்தோட்டங்களில் வன விலங்குகள் இல்லை என உறுதி செய்த பின்பு பணிக்கு தொழிலாளர்களை அனுப்ப வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.