சத்தியமங்கலம்: தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த 2 காட்டு யானைகள் துவம்சம் செய்ததில் 50 வாழை மரங்கள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராம மக்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாளவாடி அருகே உள்ள சேஷன் நகர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன் (40). இவரது விவசாய தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 1,400 நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் உள்ளன. இவரது விவசாய தோட்டம் தாளவாடி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் ரவிச்சந்திரனின் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை தின்றும், முறித்தும் சேதப்படுத்தின. வாழை மரங்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்ட விவசாயி ரவிச்சந்திரன் அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் இணைந்து சுமார் அரை மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தார். இருப்பினும் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.