மூணாறு: மூணாறில் காரை காட்டு யானைகள் சேதப்படுத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரளா மாநிலம் மூணாறில் தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான செண்டுவாரை, குண்டளை, புதுக்கடி, அருவிகாடு, ஸான்டோஸ்,தீர்த்தமலை, சிட்டிவாரை போன்ற எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகே சுற்றித் திரியும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளின் முன் நிறுத்தும் வாகனங்களையும் சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் குண்டளை கிளப் பகுதியில் புகுந்த யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள ஸ்டீபன்-சுமதி இவர்களின் வீட்டின் அருகில் நிறுத்தபட்டிருந்த காரை சேதப்படுத்தியது. இந்த நேரத்தில் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் கூச்சலிட்டு யானை கூட்டத்தை அங்கிருந்து விரட்டினர். தற்போது இந்த யானை கூட்டம் சிட்டிவாரை எஸ்டேட் பீல்டு நம்பர் 32 அருகே உள்ள சோலையில் முகாமிட்டுள்ளது.தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர் வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.