தொண்டாமுத்தூர்: கோவையில் கொட்டும் மழையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை பழங்குடியின பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து துவம்சம் செய்த சம்பவம் ஆங்கில பட டிரைலருக்கு இணையாக பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதிகாலை நடந்த பத பதைப்பு சம்பவம் வைரலானது. கோவை ஆலாந்துறை அருகே உள்ளது நல்லூர்பதி. இந்த பழங்குடியின மலைகிராமத்தை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (60). இவர், வீட்டில் தனியே வசித்து வருகிறார். இன்று அதிகாலை திடீரென ஊருக்குள் புகுந்த ஒற்றை தந்தம் உள்ள காட்டுயானை குஞ்சம்மாள் வீட்டிற்குள் நுழைந்தது. முன்னால் வேயப்பட்டிருந்த சிமெண்ட் அட்டையை நொறுக்கியது.
சத்தம் கேட்டு குஞ்சம்மாள் வெளியே வந்தார். அப்போது யானை நுழையும் காட்சியை செல்போனில் படம் பிடித்த ஒருவர் யானை வந்துள்ளது. ஐயோ… உள்ளே போ… உள்ளே போ… என கூச்சல் போட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட பெண் யானையிடம் இருந்து தப்பினார். யானையை பார்த்த அங்கிருந்து ஒரு ஆடு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொதுமக்களை மிரட்டிய ஒற்றை காட்டுயானையை பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் வனத்துக்குள் விரட்டியடித்தனர்.
பெரும்பாலும் வறட்சி காலங்களில் தான் யானைகள் குடிநீர், உணவு தேடி ஊருக்குள் வரும். இன்று காலை கோவையில் 3வது நாளாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு, கொட்டும் மழையில் யானை ஊருக்குள் நுழைந்து வீட்டை துவம்சம் செய்த சம்பவம் மக்களை பீதியடைய செய்துள்ளது. யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானை வீட்டை உடைத்து நொறுக்கும் காட்சி, ஆங்கில பட டிரைலருக்கு இணையாக உள்ளதால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தென்னை மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
கோவை மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி அருகே உள்ளது காமாட்சி நகர். இங்குள்ள தென்னை மரம் ஒன்று இன்று காலை வேரோடு சாய்ந்து மின் கம்பியில் விழுந்தது. இதில் 5 மின் கம்பங்கள் முறிந்து சேதமானது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்னை மரத்தை அகற்றி பழுதான மின்கம்பத்தை சரி செய்யும் பணி நடந்தது. இரவுக்குள் மீண்டும் மின்இணைப்பு கிடைக்க மின் ஊழியர்கள் வேகமாக பணிகளை செய்தனர்.