சென்னை: சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஈஸ்வரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசினர். செங்கோட்டையன் பேசுகையில், ‘லைசன்ஸ் உள்ளவர்கள் காட்டு பன்றியை சுட கடந்த காலத்தில் அனுமதி இருந்தது. அது மீண்டும் வழங்கப்படுமா? மயில்களின் இன பெருக்கத்தை குறைக்கும் வகையில் அவற்றின் முட்டைகளை எடுத்து வனத்துறையினரிடம் கொடுப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுமா’ என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் துரைமுருகன்: உறுப்பினர்கள் குறிப்பிடுவதை போல எல்லா வன உயிரினங்களையும் ஒழித்துவிட்டால் காட்டில் என்னதான் இருக்கும்.
அமைச்சர் பொன்முடி: கேரளாவில் காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியது தவறு. முதல்வர்தான் தமிழ்நாட்டில் 3 கி.மீ தூரத்தில் வந்தால் காட்டு பன்றிகளை சுடலாம் என்று தெரிவித்திருக்கிறார். வனத்துறையினர்தான் சுட வேண்டும். மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்தால் இறைச்சிக்காக கொன்று சென்று விடுவார்கள். எனவே காட்டு பன்றிகளை சுட மாவட்ட கலெக்டர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் உயிரிழந்தவர்களின் பட்டியலை கொடுத்தால் அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்.